Saturday, November 11, 2006

வல்லிக்கண்ணன்

பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

திருநெல்வேலி, நவ. 11: சிறுகதை, நாவல், திறனாய்வு என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இறுதிமூச்சு வரை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். இலக்கியத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றால், மணவாழ்க்கையை மறுத்து, எளிமையாக வாழ்ந்தவர்.

சிறுகதைகளின் உச்சத்தை தொட்ட நெல்லைச் சீமையின் அழியாப் புகழ் பெற்ற இலக்கியகர்த்தா. புதுமைப்பித்தனின் சம காலத்தவர்.

திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதல் இலக்கிய தாகம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக, தனது பெயரைக்கூட ஊரின் பெயரை நினைவுகூரும் வகையில் வல்லிக்கண்ணன் என மாற்றிக் கொண்டார்.

தமக்கிருந்த இலக்கிய தாகத்துக்கு வடிகால் தேடவும், அதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் ஆர்வத்துடனும் தான் பார்த்து வந்த அரசு வேலையை உதறிவிட்டு நடந்தே சென்னை சென்றார். அங்கு "காந்தி', "கிராம ஊழியன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி செய்தார்.

புதுமைப்பித்தனுடன் தொடர்பு வைத்திருந்த வல்லிக்கண்ணன், பல குறு நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குடும்பச் சூழலில் இருந்து விலகி இருந்த இவர், அவரது சகோதரர் இறந்த பிறகு அந்தக் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர் எழுதிய ""புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' என்ற திறனாய்வு நூலுக்கு 1978-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வல்லிக்கண்ணன். இதே ஊரைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளை முதல் விருதைப் பெற்றவர் ஆவார்.

தாமிரபரணி பிரியர்: சென்னையில் வசித்து வந்த வல்லிக்கண்ணன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த உடன் பஸ் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து நேராக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.

செய்தி : தினமணி

விஜயகாந்த் மண்டப அரசியல்

எனது கட்சியை அழிப்பதற்காக திருமண மண்டபத்தை இடிக்கிறார்கள்
விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, நவ.11-

எனது கட்சியை அழிப்பதற்காகவே, திருமண மண்டபத்தை இடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்று விஜயகாந்த் குற்றம் சுமத்தி உள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண மண்டப விவகாரம்

சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இப்போதைக்கு எனது திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்றார். பின்னர் விஜயகாந்த் மாற்று திட்டம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்றார். அப்போதே நான் இடித்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன்.

இந்த நிலையில் ஜனவரி 1-ந் தேதி எனக்கு எந்த வாழ்த்தும் அனுப்பாத டி.ஆர்.பாலு புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தை வைத்து, ஓய்வு பெற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட அமைப்பாளர் ஒருவரை கொண்டு மாற்று திட்டத்தை தயாரித்தேன்.

அதன்படி எனது திருமண மண்டபம் பகுதியில் மேம்பாலம் வரவில்லை. அந்த பகுதியில் தரைவழிப் பாதை தான் செல்கிறது.

தேர்தல்கள் முடிந்தபின்

அதனை நிராகரித்து விட்டதாக இப்போது பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் என்ன காரணம் என்று கூறவில்லை. தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களது மனது தான் ஒத்துவரவில்லை. இத்தனை மாதம் கழித்து, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் முடிந்த பின்னர் இப்போது இடிப்பதாக கூற காரணம் என்ன?

மத்திய கைலாஷ் பகுதியில் கோவிலை இடிக்காமல் கோவிலுக்கு பின்னால் பாதையை கொண்டு செல்லவில்லையா? ஏன் கோவிலை இடிக்க வேண்டியது தானே? மதுரை மற்றும் பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக கோவில்களை இடிக்கவில்லையா?

விமான நிலைய விரிவாக்கம்

உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கிறது என்று பல ஆண்டுகளாக கேட்கிறார்கள், அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மண்டபத்தை இடித்துவிட்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வீடு தரப்போகிறார்களா? வாகனங்கள் செல்லும் தரைவழிப்பாதை தானே, மாற்றி அமைத்தால் என்ன குறைந்துவிடும். கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூரில் இடம் தேவை என்ற போது எதிர்ப்பு கிளம்பியது. அங்கு குடியிருப்பவர்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் என்பது தெரியவந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். மத்திய அரசு அந்த இடத்தை கேட்கிறது. ஆனால் தமிழக அரசு அதனை கையகப்படுத்தி தரும் திட்டத்தை கைவிட்டு விட்டது.

அதே போல சென்னைக்கு வெளியே துணை நகரம் அமைக்கப்போவதாக கூறினார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் அதனை கைவிட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, தேவையில்லை என்றால் ஒன்று.

கட்சியை அழிக்க சதி

சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினோம். அதைவிட உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதனால் விஜயகாந்தை வளரவிடக் கூடாது. கட்சியையே அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு அடுத்த படியாக எனது அலுவலகத்துக்கு தான் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய மண்டபம் இருக்கிறது. எனவே நம்மைப் போலவே தே.மு.தி.க.வும் கூட்டம் நடத்துவதா என்ற எண்ணம். இந்த கட்டிட இடிப்பு விவகாரம் திட்டமிட்ட சதிச் செயல். தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருக்கலாமே?

தவறான தகவல்

மதிப்பீடு எவ்வளவு என்று கேட்டார்கள். எவ்வளவு எடுக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் தானே மதிப்பு எவ்வளவு என்று கூறமுடியும். நஷ்டஈடு அதிகப்படுத்தி கேட்டார்கள் என்று டி.ஆர்.பாலு தவறான தகவல்களை கூறியிருக்கிறார். முறையான வரைபடமும், எவ்வளவு பாகத்தை எடுக்கப் போகிறீர்கள் என்றும் தான் கேட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

மக்கள் இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றம் செல்வீர்களா?

நிருபர் கேள்வி:- அடுத்த நடவடிக்கை என்ன, நீதிமன்றத்தை நாடுவீர்களா?

பதில்:- யாரிடமும் பேசி பயனில்லை. உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றத்தை நாடினோம். என்ன நடந்துவிட்டது.

வண்டிச்சக்கரம் போன்றது

கேள்வி:- சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்புவீர்களா?

பதில்:- சட்டசபையில் பேசி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது. வங்கியில் கூட கடன் தர மறுத்ததால் என் உழைப்பு மற்றும் மற்றவர்களிடம் கடன் வாங்கி கட்டியது. நான் ஏன் இதனை இழக்க வேண்டும். மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் என அனைத்திலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்கள். காலம் வண்டிச் சக்கரம் போன்றது. சுழன்று கொண்டே இருக்கும். இப்படியே போய் விடாது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

Friday, November 10, 2006

தலைப்புகள்-11/10

தினத்தந்தி

* சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது - கருணாநிதி
# தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

* ஈராக்கில்இருந்து ராணுவம் வாபஸ் ஆகாது - புஷ்
# அமெரிக்க தேர்தலில் எங்கள் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதால் ராணுவத்தை வாபஸ் பெறமாட்டோம் என்று புஷ் தெரிவித்தார்.

* இலங்கையில் ராணுவ படகு மூழ்கடிப்பு
# விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை ராணுவ படகு மூழ்கடிப்பு. இன்னொரு படகு தீப்பிடித்து எரிகிறது.

* சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலா?
# விமான நிலையங்களை தகர்க்கப் போவதாக வந்த தகவலையடுத்து சென்னையில் தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கஆலோசனை.

* புதிய சினிமா பற்றி ரஜினிகாந்த் தகவல்
# ரஜினிகாந்த் ராவணனாக நடிக்கப்போவதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்று ரஜினிகாந்த் கூறினார்.

தினமணி

* இலங்கைத் தமிழர் பிரச்சினை- மத்திய அரசு அணுகுமுறையில் மாற்றம் தேவை: கருணாநிதி
* இலங்கைக்கு மைசூர் பருப்பு, பாசிப்பயறு: மத்திய அரசு முடிவு
* அல்-காய்தா மிரட்டல்: விமான நிலையங்களில் அதிகபட்ச உஷார் நிலை
* 'அமெரிக்க விசா'- இனி 1 வாரத்தில் நேர்காணல்
* ஆஸி.வீரர்களின் நாகரீகமற்ற செயலே அது!- பவார்
* நேபாள அரசு-மாவோயிஸ்டு இடையே அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க விசா

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவருக்கு இனி 1 வாரத்தில் நேர்காணல்

புதுதில்லி, நவ. 10: அமெரிக்கா செல்ல விரும்புவோர் அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா கோரி விண்ணப்பம் அளித்தால் இனி ஒரு வாரத்தில் அவருக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மேலும் விசா கட்டணம் 30 சதவீதம் குறையும் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்போர்ட் தெரிவித்தார்.

தில்லியில் நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவர்கள் இதுவரை 6 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி ஒருவார காலத்துக்குள் அவர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். இந்த காத்திருப்பு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சீரமைப்பின் இன்னொரு பகுதியாக விசா கட்டணம் வியாழன் முதல் 50 டாலர் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் விசா கட்டணம் பழைய கட்டணத்தில் இருந்து 30 சதவீத அளவுக்கு குறையும் என்றார் அவர்.

செய்தி: தினமணி

Thursday, November 09, 2006

தலைப்புகள்-11/9

* பள்ளி மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் பலி! * மட்டக்களப்பில் தமிழ் அகதிகள் மீது கொடூர தாக்குதல்
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் பள்ளி ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அந்த பள்ளியில் அகதிகளாக தங்கியிருந்த 40 பேர் கொல்லப்பட்டனர். நுõற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மீண்டும் ஆரம்பம் * டில்லியில் சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பது * பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
# புதுடில்லி : டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கடை களுக்கு "சீல்' வைக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது.டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் மேற்பட்ட கடைகளுக்கு "சீல்' வைக்கும் பிரச்னை, பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

* ஜெ., வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் நான்கு மணி நேரத்தில் கைது
# சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்புறமுள்ள இரும்பு கதவை இருசக்கர வாகனத்தில் சென்று முட்டித் தள்ளியவர், "மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தரவில்லை' என்று கூறி அசிங்கமாக திட்டினார். அங்கிருந்த கமாண்டோ போலீசாரிடமிருந்து தப்பியவரை நான்கு மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.

* அமெரிக்க பார்லி., தேர்தலில் அதிபர் புஷ் கட்சிக்கு அடி * பெருவாரியான இடங்களை அள்ளியது ஜனநாயக கட்சி
# வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல்களில் அதிபர் புஷ் கட்சியான குடியரசு கட்சிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்லிமென்ட் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. மாகாண கவர்னர் பதவிகளிலும் பெரும்பான்மையானவை இக்கட்சி வசமே வந்து விட்டன. செனட் சபையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

* இந்தியாவின் நான்கு பெருநகர ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த நிலையங்களாக மாற்றப்படும் : லாலு அறிவிப்பு
# "உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக சென்னை, மும்பை உட்பட நான்கு பெருநகர ரயில்வே நிலையங்களும் மாற்றப்படும் 'என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

* நேபாள அரசு மாவோ.,க்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து * இடைக்கால அரசு அமைக்கவும், தேர்தல் நடத்தவும் இருதரப்பும் முடிவு
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நீண்ட இழுபறிக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கடந்த பத்தாண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த நேபாள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வரும் டிச., 1ம் தேதிக்குள் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பவாரிடம் "ஸாரி' கேட்க தயார்! * பாண்டிங் பகிரங்க அறிவிப்பு
# சிட்னி : சரத் பவார் விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்பகிரங்க மன்னிப்பு கேட்க முன் வந்துள்ளார். தனது செயல் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், சரத் பவார் உள்ளிட்ட இந்திய நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவிக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 08, 2006

காளிமுத்து காலமானார்

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மரணம்

நவம்பர் 08, 2006

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

கமுதி அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் பிறந்த காளிமுத்துவுக்கு நிர்மலா, மனோகரி என இரு மனைவியர். இவர்களில் நிர்மலா சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அவர் இறந்ததிலிருந்தே காளிமுத்து மனம் உடைந்து காணப்பட்டார். அதுவே அவரது உடல் நலிவுக்கும் முக்கியக் காரணமானது.

சில மாதங்களுக்கு முன் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் உடல் நிலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அவரை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக காளி¬த்துவால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் காளிமுத்துவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்து மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். காளிமுத்துவின் உடல் முதலில் செனடாப் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காளிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெ இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

காளிமுத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

தலைப்புகள்-11/8

தினமணி

* கடைகளை மூடும் நடவடிக்கையை தடுக்கக் கோரி பிரதமரை சந்திக்க தில்லி கவுன்சிலர்கள் முடிவு
* பிப்.22 வரை "எய்ம்ஸ்' இயக்குநராக வேணுகோபால் நீடிக்க தடையில்லை
* ஜெஸிகா லால் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றமுடியாது: தில்லி உயர்நீதிமன்றம்
* ரயில் நிலையங்களில் "காய்கறி சாலட்': லாலுவின் புதிய அறிமுகம்
* ஐசிசி தரப் பட்டியலில் தோனிக்கு 6-வது இடம்
* ஜப்பானில் சூறாவளி: 9 பேர் சாவு
* புதுச்சேரி: அதிகரித்து வரும் ஏற்றுமதி பொருள்கள்
* பெங்களூர்: தீவிரவாதிகள் உடுருவல்: சிவராஜ் பாட்டீலுடன் குமாரசாமி ஆலோசனை
* இலங்கை: பெரும் தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம்: ராணுவம் புகார்
* சதாமைத் தூக்கிலிட்டால் தூதரகங்களை தாக்குவோம்: பாத் கட்சி மிரட்டல்
* தென் மாவட்டங்களில் பலத்த மழை- ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
* டிசம்பர் 4-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
* மீனவர்கள் நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை: ஜெ. குற்றச்சாட்டு
* இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்: விஜயகாந்த்
* சரத்குமார் தனிக்கட்சி தொடங்க ரசிகர்கள் கோரிக்கை