Tuesday, November 07, 2006

சரத்குமார் விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா
கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை, நவ.7-

அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் விலகல்

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார் நடிகர் சரத்குமார். பாராளுமன்ற மேல்சபையில் தி.மு.க. சார்பில் வகித்து வந்த எம்.பì. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தை சரத்குமார் மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தபோது அவருடன் அவரது மனைவி ராதிகாவும் உடன் சென்றிருந்தார். அப்போது, அவருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்தார்.

ராதிகா நீக்கம்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ராதிகா நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு, சரத்குமார் மட்டும் கட்சியில் நீடித்து வந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளதாகவும், அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடத்துக்கு அனுப்பியிருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விரும்பத்தகாத நிகழ்வுகள்

சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக எனது அரசியல் வாழ்க்கையில் கடினமான, மனவேதனை அளிக்கக்கூடிய முடிவுகளை நான் எடுக்க நேர்ந்துள்ளது. எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகப் பெருமக்களும், தமிழக மக்களுமே சினிமாவில் நான் இப்போது அடைந்திருக்கும் நிலையை எட்டுவதற்கு காரணமாவார்கள். எனது சினிமா தொழìலை தொடரும் அதே வேளையில், சமுதாய நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பங்களிக்க விரும்பினேன்.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், மாநிலத்தில் சமூக ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் நான் எனது ரசிகர்களிடம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வேலைப்பளு

அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் நான் மேற்கொண்ட முடிவுகள் எப்போதும் சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்டவையே ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மறëறும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரதëதில் ஈடுபட்டேன். கட்சியில் எனக்களிக்கப்பட்ட பணிகளை விருப்பத்துடன் ஏற்று திருப்தìகரமாக செய்து முடித்திருக்கிறேன்.

தற்போது, நான் சார்ந்திருக்கும் சினிமா தொழிலில் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அத்துடன், நான் தலைவராக பொறுப்பு வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ராஜினாமா

இது போன்றதொரு சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைமையிடத்துக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன். எனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் பல உயர்வுகளைப் பெற்று, சினிமா தொழில் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.

இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

செய்தி: தினத்தந்தி

விஜயகாந்த் மண்டபம்

விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும்! : "வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு

சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரிய மேம்பாலம் கட்ட மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, நடிகர் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உட்பட நுõற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களை கையகப்படுத்தி அவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டது.இடத்தை கையகப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயகாந்துக்கு தெரியப்படுத்தியது. அப்போது விஜயகாந்த் அரசியல் கட்சியை துவக்கவில்லை. இடத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீசை டி.ஆர்.ஓ., வழங்கிய நேரத்தில், அரசியல் கட்சி துவங்கியிருந்தார் விஜயகாந்த். கல்யாண மண்டபத்தில் கட்சி அலுவலகத்தையும் அமைத்து இருந்தார். திருமண மண்டபம் இடிக்கப்படாமல் தடுப்பதற்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் பேசினார். அப்போது, தனது கட்டடம் இடிபடாமல் மேம்பாலத்தை அமைப்பதற்கு வசதியாக மாற்று திட்டம் ஒன்றையும் கருணாநிதியிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பு பற்றிய விவரத்தை தி.மு.க., வெளியிட்டதால் அக்கட்சி மீது விஜயகாந்த் அதிருப்தியடைந்தார்.

எனினும் விஜயகாந்த் அளித்த மாற்று திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டடம் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது, அதில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இதன் பின் தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும், ஆளுங்கட்சி மீதான விஜயகாந்தின் விமர்சனம் கடுமையானது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதும், தி.மு.க.,வை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.இதனால் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது. இந்நிலையில், விஜயகாந்தின் மாற்று திட்டத்தை "இந்திய ரோடு காங்கிரஸ்' என்ற மத்திய அரசு நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் 125வது ஆண்டு வணிக செயல்முறை பற்றிய விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. இப்பணிக்கென 168 பேருடைய நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருந்தது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து 164 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பங்களை கொடுத்தனர். ஆனால், நிலம் கையகப்படுத்துவற்கு நடிகர் விஜயகாந்த் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது போல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நிலத்திற்குச் சொந்தமானவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

நடிகர் விஜயகாந்த் தரப்பில் வக்கீல் ஒருவர் மாற்றுத் திட்டம் ஒன்றை கொடுத்தார். அதற்கான வரைபடத்தையும் சமர்ப்பித்தார். அதில் பாரிமுனையில் இருந்து பாடி செல்வதற்கு பாதை இல்லை. அவர் கொடுத்துள்ள மாற்றுத் திட்டத்தை சில தொழில்நுட்ப காரணங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மண்டபத்தைச் சுற்றி, 40 மீட்டர் சுற்றளவுக்கு நிலம், மேம்பாலம் கட்ட தேவைப்படுவதால் இந்த மாற்றுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால், மாற்றுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணி துவங்கும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணியால் 168 பேர் பாதிக்கப்படுவர்; அவர்களில் விஜயகாந்தும் ஒருவர். சென்னை துறைமுக பொறுப்புக் கழக அறங்காவலராக இருக்கும் சண்முகம் என்பவரும் பாதிப்படுகிறார். இந்திய சாலை குழு விதிகள் படி விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்றுத் திட்டம் பொருந்தாது. போக்குவரத்து நெரிசலை தடுக்க இந்த நடவடிக்கையை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. திருமண மண்டபம் விஜயகாந்தின் மனைவி பெயரில் உள்ளது.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

மத்திய அமைச்சரின் அறிவிப்புப்படி இன்னும் சில நாட்களில் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளது. மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணியை துவக்க உள்ளதால், இடிப்பு பணி உடனடியாக துவக்கப்படும் எனத் தெரிகிறது. இதை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களா அல்லது கோர்ட்டுக்கு செல்வார்களா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், இந்த இடிப்பு சம்பவம் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலை இன்னும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: தினமலர்

தலைப்புகள்-11/7

தினத்தந்தி

* டெல்லியில் 44 ஆயிரம் கடைகளுக்கு `சீல்'
# டெல்லியில் குடியிருப்புபகுதிகளில் உள்ள 44 ஆயிரம் கடைகள்`சீல்' வைக்கப்படும்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.

* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்தியஅரசு ஆய்வு
# பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக பெட்ரோலிய துறை மந்திரி கூறினார்.

* தண்டனையை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல்
# சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அப்பீல் செய்யப்போவதாக அவருடைய வக்கீல்கள் அறிவிப்பு.

* அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா
அ.தி.மு.க.வில்இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்து கட்சி தலைமைக்கு நடிகர் சரத்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

* தீவிரவாதிகளுக்கு உதவிய தொழில் அதிபர் பிடிபட்டார்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய சென்னைதொழில் அதிபரை மைசூர் போலீசார் கைது செய்தனர்.

* நள்ளிரவில் ஆட்டம் போட்ட காதல் ஜோடிகள் கைது
சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த சோதனையில் மது மயக்கத்தில்ஆட்டம்போட்ட காதல் ஜோடிகள் கைது.

தினமணி

* தில்லியில் கடைகளுக்கு சீல்வைப்பதை தொடர உச்ச நீதிமன்றம் ஆணை
* தில்லியில் இன்று வர்த்தகர்கள் பந்த்
* கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலனை
* சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி: தடை மீறலை கண்காணிக்க குழு
* இந்தியாவுடன் விண்வெளி உடன்பாட்டில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து
* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு ஜயவர்த்தனே கேப்டன்
* பெங்களூர்: மத்திய அமைச்சர் அம்பரீஷ் வருகையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெங்களூர்
* இலங்கை: இந்தியாவுக்கு விமான சேவையை வாரத்துக்கு 100 ஆக உயர்த்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டம்
* சிறப்பு பக்கம்: சதாமுக்கு மரண தண்டனை: அப்பீல் நடவடிக்கை தொடங்கியது
தமிழகம்
* அதிமுகவிலிருந்து சரத்குமார் திடீர் ராஜிநாமா
* சென்னையில் திமுக எம்.எல்.ஏ. கைது- கண்துடைப்பு நடவடிக்கை: இல. கணேசன்
* கம்பன் கழகத் தலைவராக மீண்டும் ஆர்.எம்.வீரப்பன் தேர்வு
* துணைநகரம் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம்
* சென்னையில் ஹோட்டல்களில் ஆபாச நடனம்: 5 பெண்கள் சிக்கினர்

தினமலர்

* விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும்! : "வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு
# சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அ.தி.மு.க.,வுக்கு சரத்குமார் முழுக்கு
# சென்னை : நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.,வில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதிக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார்.

* பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் முரளி தியோரா பதில்
# புதுடில்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டில் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

* தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை
# சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வர்த்தகர்களுக்கு நிவாரணம் இல்லை; உத்தரவில் சுப்ரீம் கோர்ட் உறுதி : சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பதை தொடர மத்திய அரசு முடிவு
# புதுடில்லி :டில்லியில் சட்ட விரோத வர்த்தக நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கும் பணியை மீண்டும் தொடரும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி "சீலிங்' நடவடிக்கை அமல்படுத்தப் படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.

* அமெரிக்காவில் இன்று பார்லிமென்ட் தேர்தல் கருத்து கணிப்புகளால் எதிர்க்கட்சிகள் உற்சாகம்
# வாஷிங்டன் : அமெரிக்கா பார்லிமென்ட்டின் காங்கிரஸ் சபையை சேர்ந்த 435 எம்.பி.,க்கள், செனட் சபை எம்.பி.,க்கள் 33 பேர் மற்றும் 36 மாகாணங்களுக்கு கவர்னர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த தேர்தலில் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

* துலீப் டிராபி: சவுரவ் கங்குலி கலக்கல் சதம்
# கவுகாத்தி : வடக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், கிழக்கு மண்டல அணி கேப்டன் சவுரவ் கங்குலி சதம் அடித்து அசத்தினார்.

தினகரன்

* சதாமுக்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டம் ஈராக் கலவரத்தில் 72 பேர் பலி
* இந்தியாவின் இதயம் தமிழகம் காஷ்மீர் இளைஞர்கள் பேட்டி
* புதுச்சேரியில் கும்பல் வெறி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கொலை
* பன்னாட்டு புகையிலை கம்பெனிகளை உறுதியுடன் எதிர்ப்போம்: அன்புமணி
* தென் ஆப்ரிக்காவில் இருந்து வெற்றியோடு திரும்புவோம் டெண்டுல்கர் நம்பிக்கை

Monday, November 06, 2006

விசாரணை விபரம்

சதாம் வழக்கு: விசாரணை-தீர்ப்பு வரை...

பாக்தாத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகள் விவரம்:

2005, அக்.19: இராக்கின் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்கள் 1982-ல் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் மீது பாக்தாதில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்பாவி என்றும் குற்றமற்றவர் என்றும் தன்னை சதாம் வர்ணித்துக் கொண்டார்.

அக்.20: சதாமுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அகமது அல் பாந்தரின் வழக்கறிஞர் சதுன் ஜனாபாய் பாக்தாதில் படுகொலை செய்யப்பட்டார்.

நவ.8: இராக் முன்னாள் துணை அதிபரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தஹா யாசினின் வழக்கறிஞர் ஏ.எம்.அபாஸ் பாக்தாதில் கொலை செய்யப்பட்டார்.

நவ.9: விசாரணை நீதிமன்றம் சட்டரீதியில் செல்லத்தக்கதா என்று சதாம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

நவ.28: அரசு தரப்பு முதலாவது சாட்சியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது.

டிச.5: துஜைல் கிராமத்தில் நடைபெற்ற ஒட்டுமொத்த கைது, சித்திரவதை, கொலை குறித்து இரண்டு சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர்.

2006, ஜன.23: குர்து இனத்தவரான ரபீப் ரஷீத் அப்துல் ரஹ்மான் என்பவரை இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிமன்றம் நியமித்தது. உறுதி குறைவானவர் என்ற கடும் விமர்சனம் காரணமாக ரிஸ்கர் அகமது அமீன் ராஜிநாமா செய்ததையடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டது.

பிப்.28: ஷியா முஸ்லிம்களை சித்திரவதை செய்து கொலை செய்ய சதாம் ஹுசைன் உத்தரவிட்டது தொடர்பான அவரது கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மார்ச் 1: தன்னை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகப்படும் துஜாயில் கிராமத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக சதாம் ஹுசைன் ஒப்புக் கொண்டார்.

ஏப்.17: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள சதாமின் கையெழுத்தின் நம்பகத்தன்மையை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

மே 15-17: சதாம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர்.

ஜூன் 19: வழக்கில் சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் கோரினார்.

ஜூன் 21: சதாம் தரப்பு வழக்கறிஞர் கமீஸ் அல் ஒபீதி கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் சதாம் ஹுசைன்.

ஜூலை 26: இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட சதாம், 18 நாள்களுக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டார். தூக்கிலிடப்பட்டு சாவதை விடவும் சுடப்பட்டு இறப்பதையே விரும்புவதாக குறிப்பட்டார் சதாம்.

ஜூலை 27: வழக்கு விசாரணை அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்.29: சதாம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கலீல் அல் துலாமி அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு கடிதம் எழுதினார்.

நவ.5: சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு வழக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்.

செய்தி: தினமணி

ஆதரவு x எதிர்ப்பு

சதாமுக்கு மரண தண்டனை: அரபு மக்களின் வரவேற்பும், எதிர்ப்பும்

பேரூத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதை அரபு மக்களில் சிலர் வரவேற்றுள்ளனர். வேறு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுக் குவித்த சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சரியானதுதான் என்று சிலர் கூறினர். ஆனால் வேறு சிலரோ, இந்த தீர்ப்பு நியாயமற்றது. அமெரிக்கா திட்டமிட்டு சதாம் உசேனை பழிவாங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.

சதாம் உசேனுக்கு அமெரிக்க ஆதரவிலான நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இதன் பின்னணி என்னவெனில் அமெரிக்க படைகள் இன்னும் சில காலம் இராக்கில் தங்கியிருக்கும் என்பதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சதாமுக்கு தண்டனை ஏதும் வழங்காமலோ அல்லது தண்டனையைக் குறைத்தாலோ, அமெரிக்கா கலகப்படையினருக்கு பயந்துவிட்டது என்ற பேச்சு எழுந்திருக்கும். இப்போது அதற்கு வழியில்லை என்று தாவூத் அல் ஷிரியன் என்ற சவூதி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் சதாம் உசேனுக்கு சுதந்திரமாக ஆட்சி செய்ய உரிமை உள்ளது என்று சிலர் கருத்து கூறியுள்ளனர். சதாம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இராக்கில் வன்முறை அதிகரித்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண தண்டனை பெறும் அளவுக்கு சதாம் குற்றவாளி என்றால், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஒருவகையில் குற்றவாளிதான். லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பிரதமர் எஹுத் உல்மர்ட்டும் குற்றவாளிதான். அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அம்மானில் நகைக் கடை வைத்திருக்கும் இப்ராகிம் ஹரிஷ் தெரிவித்தார்.

சதாமுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என்று சதாம் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த ஜியாத் அல் காஸôவெனி தெரிவித்தார்.

சதாமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கைதான் என்று ஸன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இராக்கியரும், ஜோர்டானில் தொழில்நடத்தி வருபவருமான சலா ஹஸ்ஸன்.

ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஜாஸிம் அலி, இதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார். இவரும் ஜோர்டானில்தான் இருக்கிறார்.

சதாமுக்கு மரண தண்டனை வழங்கியது மிகக் கொடுமையானது. இராக்கில் இப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களை தூக்கில் போடுவதுதான் நியாயமானது. ஏனெனில் அவர்கள்தான் அமெரிக்காவின் கைக்கூலியாக இருப்பவர்கள் என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ஜாஸிம் அலி.

இந்நிலையில் குவைத் மக்கள் சிலர், சதாமுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதுதான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எப்போதோ மரண தண்டனை அளித்திருக்க வேண்டும்; காலதாமதமாக அறிவிக்கப்பட்டபோதிலும் இது வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்துள்ளனர். (1990-ல் சதாம் குவைத் மீது படையெடுத்தது நினைவிருக்கும்.)

சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்ற அரபு தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அரபு நாட்டு வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் மீது வழக்கு நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார் குவைத்தைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல் ரிதா அஸ்ஸீரி.

சதாமுக்கு மரணதண்டனை வழங்காமல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்க வேண்டும். ஏராளமான உயிர்களை பலிவாங்கிய அவர், சிறையில் அவரை குற்ற உணர்ச்சியால் அணுஅணுவாக சாகடித்திருக்க வேண்டும் என்கிறார் குவைத்தைச் சேர்ந்த கோலோத் அல்-பீலி என்ற பெண்மணி.

செய்தி: தினமணி

தலைப்புகள்-11/6

தினத்தந்தி

* சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை
# 148 பேரை கொன்று குவித்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு.

* கவுகாத்தியில் 2 இடத்தில் குண்டு வெடித்து 10பேர் சாவு
# கவுகாத்தி நகரில் 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் இறந்தனர். 52 பேர் காயம்.

* கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
# 17-ந் தேதி டெல்லி வரும் இலங்கை அதிபருக்கு சென்னையில் கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ராமதாஸ்கூறினார்.

* சென்னை மீனவர்கள் 5 பேரின் கதி என்ன?
# சென்னை காசிமேடு மீனவர்கள் சென்ற படகு பூம்பூகாரில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 5மீனவர்களின் நிலை என்ன?.

* சென்னை :ஓட்டல்களில் மதுவிருந்துடன் கொண்டாட்டம்
# சென்னையில் நள்ளிரவில் குடி போதையில் நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம்போட்டதாக 26 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தினமணி

* சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை
* "சர்வதேச சமூகம் ஏற்பதாக இருக்க வேண்டும்': இந்தியா
* சிறப்புப் பக்கம்: அரபு மக்களின் வரவேற்பும் எதிர்ப்பும்
* இந்தியா வரும் இலங்கை அதிபருக்கு கண்டனம்:
* 'வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள்' - ராமதாஸ்
* அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலகில்
* 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும்: சிதம்பரம்
* தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: வைகோ
* தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலில் மெத்தனம்: தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்
* பிராக்கென், மெக்ராத் அபாரம்: கோப்பை வென்றது ஆஸி

தினமலர்

* சதாமுக்கு தூக்கு!* 148 பேரை கொலை செய்த வழக்கில் ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு * உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேருக்கும் மரண தண்டனை
# பாக்தாத்: ஈராக் துஜெய்ல் நகரில் 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

* சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் திருத்தம்*பார்லி., தொடரில் வலியுறுத்த இடதுசாரிகள் திட்டம்
# புதுடில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்படி வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின்போது இடது சாரிகள் வலியுறுத்த உள்ளன.

* பொதுச் செயலராகிறார் ராகுல் காந்தி * காங்கிரசில் விரைவில் அதிரடி மாற்றம்
# புதுடில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

* நவ.7 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
# சென்னை: ""புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான கருத்து, மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுமானால் 95 சதவீதம் பேரை காப்பாற்ற முடியும்,'' என்று அடையாறு புற்றுநோய் மைய அறிவியல் இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்தார்

* சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடுகள் அதிகரிப்பு
# மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை எட்டியுள்ளதால், சாதாரணமாக வங்கிகளுக்கு வரவேண்டிய பணமெல் லாம் தற்போது பங்குச் சந்தைக்கு, அதாவது மியூச்சுவல் பண்ட்களுக்கு சென்று கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்திய சீன எல்லை பிரச்னையில் முன்னேற்றம் * சீன அரசு அறிக்கையில் தகவல்
# பீஜிங்: இந்தியாசீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* முதல் முறையாக ஆஸி., "மினி' சாம்பியன்!* வாய்ப்பை கோட்டை விட்டது வெ.இண்டீஸ்
# மும்பை: சபாஷ் பாண்டிங்! மினி உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்தியது.

தினகரன்

* 148 பேரை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு சதாம் உசேனுக்கு தூக்கு ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
* குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை ஆராய வேண்டும் மருத்துவர்கள் வலியுறுத்தல்
* விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தியதா? மீனவர் வலையில் சிக்கிய இலங்கை விமான டயர்கள்
* தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு சலுகைகள் தொடரும்: தயாநிதி மாறன்

Sunday, November 05, 2006

சதாம் உசேன்

சதாம் எழுச்சியும் வீழ்ச்சியும்
நவம்பர் 05, 2006

பாக்தாத்: அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சதாம் உசேன். இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் குவைத்தை ஆக்கிரமித்தார் சதாம்.

அப்போது அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கை குண்டு மழை பொழிந்து துவம்சம் செய்தபோது, படு வீரமாக பதிலடி கொடுத்து அமெரிக்காவை கலங்கடித்தவர் சதாம்.

அப்படிப்பட்ட சதாம், ஜூனியர் புஷ்ஷின் அமெரிக்க படையினரிடம் சிக்கி தாடியும், பரிதாபமான முகமுமாக பிடிபட்டபோது உலகமே சதாமுக்காக பரிதாபப்பட்டது. சதாமின் வாழ்க்கையே ஒரு போர்க்களம்தான்.

1937, ஏப்ரல் 28: ஈராக் தலைநர் பாக்தாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித் நகருக்கு அருகே உள்ள அல் ஆவ்ஜா என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார்.

1959, அக்டோரப்ச பிரதமர் அப்தல் கரிம் கசீமை கொல்ல நடந்த முயற்சியில் சதாம் பங்கேற்றார். தோல்வி அடைந்ததால் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

1963, பிப்ரவரி: பாத் கட்சி ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. சதாம் ஈராக் திரும்பினார். ஆனால் 9 மாதங்களிலேயே பாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968, ஜூலை: ராணுவத்தில் புரட்சி செய்து பாத் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

1975, மார்ச்: புரட்சிகர கவுன்சிலிந் துணைத் தலைவராக இருந்த சதாம், ஈரான் மன்னர் ஷாவுடன் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1979, ஜூலை 16: ஈராக் அதிபராக முதல் முறையாக பதவியேற்றார்.

1980, செப்டம்பர் 22: ஈரானுடன் யுத்தத்தைத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு இது நீடித்தது.

1990, ஆகஸ்ட். 2: குவைத் மீது ஈராக் படையெடுத்து கைப்பற்றியது. ஐ.நா. பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

1991, ஜனவரி 17: அமெரிக்கா தலைமையிலான படை, ஈராக் மீது போர் தொடுத்தது.

1995, அக்டோபர் 15: ஈராக்கில் நடந்த கருத்துக் கணிப்பு மூலம் மீண்டும் அதிபர் ஆனார் சதாம்.

2002, அக்டோபர் 15: மீண்டும் அதிபராக சதாம் கருத்துக் கணிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 100 சதவீதம் பேர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

2003, மார்ச் 17: ஈராக்கை விட்டு 48 மணி நேரத்திற்குள் சதாம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெடு விதித்தார்.

மார்ச் 20: ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின. சதாம் தலைமறைவானார்.

ஏப்ரல் 4: பாக்தாத் நகர வீதிகளில் சதாம் நடமாடுவது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

ஜூலை 22: சதாமின் இரு மகன்களான குவாசி, உதய் ஆகியோர் மொசூல் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூலை 31: சதாமின் இரு மகள்கள் ராக்தாத், ரானா, அவர்களின் 9 குழந்தைகளுக்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா அடைக்கலம் கொடுத்தார்.

டிசம்பர் 13: திக்ரித் நகரிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள அட்வார் என்ற இடத்தில் பதுங்கு குழியில் தலைமறைவாக இருந்த சதாம் உசேன் பிடிபட்டார்.

அதன் பின்னர் சதாம் உசேன் மற்றும் அவரது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள், ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் என அனைவர் மீதும் தனியாக நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான சதாம் உசேன், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மட்டும் அல்லாது, அனைவரையும் தனது வீர தீர பேச்சு மற்றும் செயல்களால் கவர்ந்த சதாமின் அத்தியாயம் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது.

செய்தி : தட்ஸ்தமிழ்