Tuesday, March 13, 2007

திமுக-கம்யூ நாடாளுமன்றத்தில் மோதல்

லோக்சபாவில் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள்... ரகளை! *
மந்திரி டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்தனர் *
சென்னை கடல்சார் பல்கலைக்கு எதிர்ப்பு

சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முற்பட்டபோது மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை தாக்க முற்பட்டு, அவர் கையில் இருந்த மசோதா ஆவணத்தைப் பறிக்க முயன்றனர்.

பாலுவை காப்பாற்றும் வகையில் மற்ற தமிழக எம்.பி.,க்கள் அரண் அமைத்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைக்க, மத்திய அமைச்சரவையில் கடந்த ஆண்டே விவாதிக்கப்பட்டது. விவாதம் நடந்த போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் சரத்பவார் தவிர வேறு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கடந்த டிசம்பர் 18ம் தேதி, மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவில் எடுத்துக் கொள்ளப்படும் விவாதங்கள் அனைத்துமே, விவாதம் செய்வதற்கான முதல் வாரமே ஆலோசனை செய்யப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்படுவது வழக்கம். இதேபோல், கடந்த வாரம் ஆலோசனை நடந்தபோது "கடல்சார் பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்பட்டது. அப்போதும் எந்த எம்.பி.,க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அலுவல் குறிப்பேட்டில் கூறியபடி, லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியவில் அமைச்சர் பாலு எழுந்தார். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திபுதிபு'வென சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர். சபையில் திடீரென கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனால் சபை 10 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மதியம் 12.15 மணிக்கு சபை கூடியதும், மசோதா குறித்து அமைச்சர் பாலு பேச முற்பட்டார். அப்போது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் அனில் பாசு, சுமித் லாகிரி ஆகியோர் பின் வரிசையில் இருந்து படு வேகமாக ஓடி வந்தனர். முன் வரிசையில் நின்று கொண்டிருந்த பாலுவை நோக்கி ஆவேசமாக கத்தியபடியே ஓடி வந்து, பாலுவின் கைகளில் இருந்த மசோதா ஆவணங்களை பறிக்க முற்பட்டனர். இவர்கள் இருவரோடு சேர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களும் பாலுவை தாக்க முயன்றனர். அப்போது, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், அரண் போல கைகளை அகற்றி நின்று பாலுவைப் பாதுகாத்தார். மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள், பழனி மாணிக்கத்தை தள்ளி விட்டு பாலுவை நெருங்க முயற்சி செய்தனர். இதற்குள் தங்கபாலு ஓடி வந்து எம்.பி.,க்களை அப்புறப்படுத்தினார். தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் அங்கே கூடி, மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களை கடுமையாக எச்சரித்தனர். இரு தரப்பும் ஒருவரையொருவர் எதிர்த்து ஆவேசமாக வாக்குவாதம் செய்யவே, சபையை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் எழுந்து சென்று விட்டார். அதை கவனிக்காத மேற்கு வங்க எம்.பி.,க்களும், தமிழக எம்.பி.,க்களும் அவையில் ஒருவொரையொருவர் முட்டித் தள்ளத் துவங்கிய நேரத்தில், சபை பாதுகாவலர்கள் வேகமாக உள்ளே நுழைந்து, எம்.பி.,க்களை விலக்க முயன்றனர். மூத்த அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் சிவராஜ்பாட்டீல் ஆகியோர் எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினர். அரைமணி நேரத்திற்கு பின், சபையில் அமைதி திரும்பியது.

காலை நடந்த அமளிக்கு பிறகு மதியம் 2.30 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடியது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த எம்.பி., பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் எம்.பி.,க்கள் சிலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதால் சம்பவம் நடந்து விட்டது. சபாநாயகர் இருக்கை அருகே வந்து விட்டனர். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்சி சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நடவடிக்கையினால் சபையின் கண்ணியத்திற்கும், சபாநாயகர் இருக்கைக்கும் அவமரியாதை ஏற்பட்டிருந்தால் அதற்கும் வருந்துகிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதால் எங்களது உணர்வுகள் காயப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

சபை முன்னவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மதியம் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டால், அது குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. மசோதா அறிமுகம் ஆன பின் பார்லிமென்ட் நிலைக்குழு போன்றவற்றிற்கு அது செல்லும். அப்போது தங்களது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதை விட்டு விட்டு சபையிலேயே இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசினார். அதன்பின் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இத்துடன் சபையில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தும்பை விட்டு வாலை பிடித்த கதை மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களிலும் கடல் சார் கல்வி மையங்கள் உள்ளன. சென்னையில் "துறைமுக நிர்வாக கல்வி மையம்' உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது எனவும், அதை சென்னையில் அமைப்பது எனவும் அமைச்சர் பாலு முடிவு செய்தார். இந்த விவரத்தை 200506ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு செய்திருந்திருந்தார். அதே ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக இந்த திட்டம் சென்றபோது அங்கு மகாராஷ்டிரா அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்பவார் தலைமையிலான குழு, மும்பையில் தான் இந்த பல்கலைக் கழகம் அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது. அப்போது பாலு, "அதற்கு தேவையான நிலத்தை தாருங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்றார். நிலம் அளிக்க முடியாத நிலையை ஒப்புக் கொண்ட சரத்பவார், சென்னையிலேயே அமைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதி உரையிலும் இவ்விஷயம் இடம்பெற்றது. இவ்வளவு தடைகளையும் கடந்து வந்த பின்னரே, கடல்சார் பல்கலைக் கழக மசோதாவை அமைச்சர் பாலு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் முன்னர் எந்த இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத மார்க்., எம்.பி.,க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தது, "தும்பை விட்டு வாலை பிடித்த கதை' ஆகி விட்டது.

நடப்பது "சிவில் வார்': அத்வானி வர்ணனை லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுகையில்,""இந்த சம்பவம் நடந்த போது நான் சபையில் இல்லை. சபையில் என்ன நடந்திருந்தாலும் அது மிகவும் துரதிர்ஷ்டவமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் "சிவில் வார்' (உள்நாட்டுக் குழப்பம்) உள்ளது. இந்த சூழ்நிலை முன் எப்போதும் இருந்ததில்லை. ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அமைச்சரவை கூட்டத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அமைச்சரவையில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட மசோதா இது. ஆனால் பார்லிமென்ட்டில் தாக்கலாகும் போது இப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது. சபைக்குள் பாதுகாவலர்கள் வந்து சமாதானப்படுத்துவது முன்னெப்போதும் நடந்ததில்லை. வழக்கமாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம். ஆனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே சண்டை நடப்பது கேவலமாக உள்ளது. கூட்டணி தர்மத்தை இந்த அரசு மீறியுள்ளதையே காட்டுகிறது. இந்த கூட்டணி அரசை அவர்களே முடித்துக் கொள்வர்' என்று கூறினார். அத்வானியின் பேச்சுக்கு இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். வருத்தம் தெரிவித்த சபாநாயகர் லோக்சபாவில் நேற்று அமைச்சர் பாலுவை தாக்க முயன்ற சம்பவம் நடந்த பின்னர், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறைக்கு தமிழக எம்.பி.,க்கள் விரைந்தனர். அவர்களிடம் பேசிய சபாநாயகர் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதன் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மூத்த எம்.பி.,க்கள் பாசுதேவ் ஆச்சார்யா, ரூப்சந்த் பால் ஆகியோர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

No comments: