Wednesday, March 21, 2007

பாப்உல்மர் மரணத்தில் சந்தேகம்

பாகிஸ்தான் பயிற்சியாளர் விஷம் கொடுத்து கொலையா?
விசாரணைக்காக பாகிஸ்தான் அணி ஜமைக்காவைவிட்டு வெளியேற தடை


ஜமைக்கா, மார்ச்.21-

பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் படுதோல்வி

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை போட்டிகளில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்தார்.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் உள்ள ஓட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகங்கள்

பாப் உல்மர் மர்ம சாவு குறித்து ஜமைக்கா போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் சாப்பிடும் பாப் உல்மர், சம்பவத்தன்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

பாப் உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் சென்றால் 15 நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம். ஆனால் அவரை ஒரு மணி நேரத்துக்கு பிறகே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுவரை அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது அறையில் ரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜமைக்கா போலீசாரும் மறுக்க வில்லை. சம்பவத்தன்று பாப் உல்மரை சந்தித்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் கொடுத்து கொலையா?

சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள், வேண்டுமென்றே தோற்றதாகவும், இது பாப் உல்மருக்கு தெரிய வந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாளமுடியாமல், அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் பல்வேறு ïகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பிரேத பரிசோதனை தாமதம்

இருப்பினும், பாப் உல்மர் சாவுக்கான காரணம், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகுதான், உறுதியாக தெரிய வரும். கிங்ஸ்டன் நகரில் அமலில் உள்ள உள்ளூர் சட்டப்படி, மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால் பாப் உல்மரின் குடும்பத்தினர் தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களால் உரிய நேரத்தில் வர இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமைக்கா அதிகாரிகளுக்கு பாப் உல்மர் குடும்பத்தினர் அதிகாரம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனையை கூடவே இருந்து கவனித்து, பாப் உல்மர் உடலை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி, பாகிஸ்தான் அணியின் மற்றொரு பயிற்சியாளரான முரே ஸ்டீவன்சனை பாப் உல்மர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

பாப் உல்மர் குடும்பத்தினரை எதிர்பார்த்து காத்திருந்ததால், பிரேத பரிசோதனை தாமதமாகவே தொடங்கி உள்ளது. அதன் அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகுதான், பாப் உல்மர் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.

வெளியேற தடை

பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதன்பிறகு நாளை பாகிஸ்தான் அணியினர் வெஸ்ட் இண்டீசில் இருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாப் உல்மர் மரணம் குறித்த மர்மம் தீரும்வரை ஜமைக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜமைக்கா போலீசார், பாகிஸ்தான் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் தாயகம் திரும்பும் திட்டத்தை சனிக்கிழமைக்கு பாகிஸ்தான் அணியினர் தள்ளி வைத்துள்ளனர்.

*தினத்தந்தி

-oOo-

பாப் உல்மர் மரணத்தில் நீடிக்கிறது மர்மம் பிரேத பரிசேதனை அறிக்கையில் போலீசார் சந்தேகம்

ஜமைக்கா : பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் உல்மரின் திடீர் மரணத்தில் மர்மம் இன்னமும் தொடர்கிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை கடைசியாக சந்தித்தவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 15 நிமிட பயணத்தில் தான் ஆஸ்பத்திரி இருக்கிறது. ஆனால் அறையில் மயங்கிக் கிடந்த உல்மர், ஒரு மணி நேரம் கழித்து தான் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்விஷயமும் பாத்ரூமில் உறைந்து கிடந்த ரத்தமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒருவேளை உல்மர் விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாக்., வீரர்களுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்றும், இது உறுதிப்படுத்தப்படும் வரை பாக்., வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அங்கு பிரச்னை கிளம்பியுள்ளது. நாளை (மார்ச் 22) வெ.இண்டீசைவிட்டு பாகிஸ்தான் அணி கிளம்புவதாக இருந்தது. போலீஸ் விசாரணையால் மார்ச் 24ம் தேதிதான் அந்த அணி புறப்பட முடியும் என தெரிகிறது.

*தினமலர்.

No comments: