Friday, March 16, 2007

உச்சநீதிமன்ற நீதிபதி அழுகை!

உச்சநீதிமன்றத்தில் கதறி அழுத ஏ.ஆர்.லட்சுமணன்!

மார்ச் 16, 2007

டெல்லி: உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு மிகவும் அநாகரீகமான வகையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்த லட்சுமணன், கண்ணீர் விட்டுக் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் ரூ. 5,00 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் சிங் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், முலாயம் சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் இன்று நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

தனக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. எனது நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான மிரட்டலை நான் சந்தித்ததில்லை என்று கூறிய லட்சுமணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட லட்சுமணன், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.

இன்னும் ஐந்து நாளில் லட்சுமணன் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் தரப்பிலிருந்து லட்சுமணனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி அவர் நீதிமன்றத்தில் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு என்ன மாதிரியான மிரட்டல் வந்தது என்பதைத் தெரிவிக்க லட்சுமணன் மறுத்து விட்டார்.

3 comments:

இலவசக்கொத்தனார் said...

இந்த பதிவு லேட் சிந்தாநதி. இட்லிவடையார்தான் சூடா இந்த செய்தியைத் தந்துட்டாரே!!

✪சிந்தாநதி said...

பிறகு தான் கவனித்தேன்.

இருந்தாலும் இது விரிவான செய்தி. அது செய்தி விமர்சனம்.

Anonymous said...

என்னையா இது அநியாயமா இருக்குது!
நீதியின் குடும்பியிலேயே அரக்கன் கைவச்சுட்டான்.