போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது!!:
அச்சத்தில் தமிழர்கள்!!!
பிப்ரவரி 22, 2007
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.
நார்வே தூதுக் குழுவின் முயற்சியால், இலங்கை அரசுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரம்பம் முதலே இரு தரப்பும் போர் நிறுத்தத்தை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை மீறி விட்டதாக மாறி மாறி புகார் கூறி வந்தன.
இந் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இலங்கையில் பெரிய அளவில் போர் மூளக் கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல இலங்கை கடலோரப் பகுதிகளில் கடல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடல்படை ரோந்துக் கப்பல்களும் அதிக அளவில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை சுத்தமாக நின்றுள்ளது. தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டுள்ள தமிழர்கள் காட்டுப் பகுதியில் தங்கியுள்ளனர்.
இலங்கையில் நிலவும் இந்தப் பீதி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல அச்சப்பட்டு மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். மீன் பிடிக்கச் சென்றால் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்திய கடற்படை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கை பதட்டத்தை மனதில் கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டில் கொணட் வரப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தைத் தகர்க்க புலிகள் திட்டம்:
இதற்கிடையே கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது.
இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தப் படகுகளைக் கொண்டு கொழும்பு துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய, இலங்கை எல்லையில் இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தில் புகுந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை, விமானங்களை குறி வைத்துத் தாக்கியது. அதே போல தற்போது கொழும்பு துறைமுகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த கடல் புலிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
தாக்குதல் நடத்த, 15 தற்கொலை படகுகளும் புலிகள் அமைப்பின் தலைமையின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்த இடத்தை தாக்க வேண்டும் என்று சாடிலைட் போன் மூலம் வரும் உத்தரவுக்காக இவர்கள் காத்துள்ளனர். சிக்னல் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதேசமயம், நமது இலக்கு கொழும்பு துறைமுகம்தான், தமிழர்கள் மீதோ. இந்திய நிலைகள் மீதோ எந்த தாக்குதலும் நடத்த க்கூடாது என்று கடல் புலிகளுக்கு, புலிகள் தலைமையகம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் கோடியக்கரை அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர், புலிகளின் படகை மடக்கிய போது விடுதலைப்புலிகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரண் அடைந்துவிட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்நது, தமிழக கடலோரப் பகுதிகளில் முழு அளவில் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.
ஆயுதக் கடத்தல்: மேலும் 6 பேர் கைது:
இதற்கிடையே, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் வெடிபொருட்கள், அலுமினியக் குண்டுகளை கடத்தியது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரிடையாக தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏஜெண்டுகள் மூலமாக வெடிபொருட்களை அனுப்புகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புலிகளை விசாரிக்க விரும்பும் இலங்கை கடற்படை:
இதற்கிடையே, ஆயுதக் கடத்தல் தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள 3 விடுதலைப் புலிகளை தாங்களும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை கடற்படை இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக விடுதலைப் புலிகளிடம் நடைபெறும் விசாரணையில் கடற்படையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
கிளிநொச்சி பள்ளி மீது குண்டு வீச்சு:
இந்தநிலையில், வன்னி பகுதியில் இலங்கை விமானப்படையின் கேபிர் ரக விவீமானங்கள் விடிய விடிய குண்டு வீசித் தாக்கியதில், பல தமிழர் வீடுகள் தரைமட்டமாயின.
கிளிநொச்சி அருகே பள்ளிக்கூடம் மீது குண்டு வீசியதில், அங்கிருந்த மாணவர்கள் தப்பி ஓடினர். மருத்துவமனை மற்றும் சந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
1 comment:
thanks for the upper position label.
Post a Comment