Friday, February 23, 2007

கடமை தவறும் பிள்ளைகளுக்கு ஜெயில்

மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அதிரடி முடிவு:
வயதான பெற்றோரை பாதுகாக்க தவறும் பிள்ளைகளுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை

புதுடெல்லி, பிப்.23-

வயதான பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பராமரிப்பதை கட்டாயம் ஆக்கும் வகையிலான மசோதா ஒன்றை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வயதான பெற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வகையில் அனைத்து மாநில அரசுகளும் தாலுகா அளவில் முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.

வயதான பெற்றோர் தங்களது பிரச்சினைகளை இந்த ஆணையத்தில் தாங்களே நேரிடையாக ஆஜராகி தங்களது குறைகள் குறித்து ஆணையத்தின் முன்பு விவாதிக்கலாம். மேலும் வழக்கறிஞர்களின் உதவியுடன்தான் வாதாட முடியும் என்ற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்கீழ், வயதான பெற்றோரை பராமரிக்காத வாரிசுகளுக்கு 3 மாத சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். வயதான பெற்றோரின் சுகாதாரம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோரின் சொத்துக்களை அந்தந்த மாநில அரசின் காவல்துறை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் எழுதப்பட்ட உயிலை மாற்றி அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களது தேவைகளுக்கு ஏற்ப வாரிசுகள் அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இந்த புதிய மசோதா மூலம் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும் இவர்களுக்கு கிடைத்துள்ள பரிசு பொருட்களையும் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரியை ஒரு சதவீதம் குறைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மத்திய விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைகிறது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இந்த வரிகுறைப்பு அமலுக்கு வருகிறது.

இதற்காக, வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். மத்திய விற்பனை வரி சட்டத்திலும், கூடுதல் உற்பத்தி வரி சட்டத்திலும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். நாடு முழுவதும் மதிப்பு கூட்டு வரி (வாட்) அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மத்திய விற்பனை வரியை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, பணவீக்க அதிகரிப்பு ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வாலும்தான் பணவீக்கம் அதிகரித்தது. பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றுவதன்மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம். தற்போது சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் சப்ளை அதிகரித்துள்ளது. ஆனால் மற்ற பொருட்களின் சப்ளை இன்னும் அதிகரிக்கவில்லை. விலைவாசியை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையை மத்திய வேளாண்மை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அதன்பிறகு இதுகுறித்து அந்த அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். பின்னர் மந்திரிசபை தனது நிலையை அறிவிக்கும். தேவை அதிகரித்ததால்தான் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட முடியாது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

சுங்கத்துறைக்காக ரூ.358 கோடியே 19 லட்சம் செலவில் 109 கப்பல்கள் வாங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 5 ஆண்டுகளுக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கும், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதை மருந்து பொருட்கள் ஆகியவற்றை நமது நாட்டிலிருந்து கடல் வழியாக கடத்துவதை தடுப்பதற்கு, சுங்கத்துறைக்கு இக்கப்பல்கள் உதவும். வரும் 2009-ம் ஆண்டுக்குள் 109 கப்பல்களை வாங்கும் பணி முடிந்து விடும்.

இந்திய ரெயில்வே அமைக்க திட்டமிட்டுள்ள கிழக்கு சரக்கு ரெயில்பாதை, மேற்கு சரக்கு ரெயில்பாதை ஆகியவற்றுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கிழக்கு சரக்கு ரெயில்பாதை ரூ.11,589 கோடி செலவிலும், மேற்கு சரக்கு ரெயில்பாதை ரூ.16,592 கோடி செலவிலும் அமைக்கப்படும்.

செமி கண்டக்டர்கள், எல்.சி.டி., சோலார் செல்கள், மற்றும் நவீன மைக்ரோ தொழில்நுட்ப, நானோ தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக செலவாக தற்போது 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. இந்த நிர்வாக செலவை 4 சதவீதமாக உயர்த்த மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூடுதல் ஆள் நியமனம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2001-2002-ம் ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் 9-வது ஆண்டறிக்கையையும், அதன் நடவடிக்கை அறிக்கையையும் வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ரூ.165 கோடி செலவில் இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.) அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும்.

தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே துருக்கி நாட்டுக்குள் நுழைவதற்கான ஒப்பந்தத்தை துருக்கி நாட்டுடன் செய்து கொள்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் துருக்கி மக்கள், இந்தியாவுக்கு விசா இல்லாமலேயே வரலாம்.

அன்னிய நேரடி முதலீடு

மேற்கு வங்காளத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், துணை நகரங்கள், வீடுகள் ஆகியவை அமைப்பதற்கு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த சலீம் குரூப் ரூ.2,250 கோடி அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் மைக்ரோ பைனான்ஸ் மசோதா தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

கொல்கத்தாவில் உள்ள தேசிய இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை மூடுவது என்றும், அதில் பணியாற்றும் ஊழியர்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு பணிமாற்றம் செய்வது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No comments: