Saturday, February 24, 2007

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: அணுஆயுதங்களை தாங்கிச் சென்று இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட "ஷாகீன்' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை மூலமாக இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தரைப் பகுதியிலிருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் ஹட்ப் 6 (ஷாகீன் 2) ரக ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. மேலும் இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று ரகசிய இடத்திலிருந்து "ஷாகீன்2' ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ""பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த ஏவுகணை சோதனை,'' என்று தெரிவித்துள்ளது. ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் திறனை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் ஏவுகணை சோதனையை மேற்கொண்ட தொழில்நுட்ப அணியினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ கூடுதல் தளபதிகளின் தலைவர் இசான் உல் ஹக் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டு சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், ""நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு அரசு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த ஏவுகணை திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

1 comment:

மாசிலா said...

//நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு அரசு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும்.// இதன் பெயர்தான் பாதுகாப்பா? குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதைதான். தன் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற தெரியாத பைத்தியக்காரர்கள் இப்படி பொதுமக்களின் வரிப்பணத்தில் அதிர்ச்சி ஊட்டும் வீண் செலவுகள் ..... இதெல்லாம் தேவையா? மதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் பைத்தியக்கார உலகம் என்றுதான் அழியுமோ? மிகுந்த வேதனை தரும் செய்தி. :-(((