சிபுசோரனுக்கு ஆயுள்சிறை!
கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி
சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை
ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
புதுடெல்லி, டிச.6-
முன்னாள் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரனிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா.
இவர் கடந்த 1994-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது.
5 பேர் மீது வழக்கு
கொலையில் சிபுசோரனுக்கு முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. அவர் தீட்டிய சதித்திட்டப்படி, நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர பட்டாச்சார்யா, பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1998-ம் ஆண்டு சிபுசோரன் உள்பட 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது.
குற்றவாளி
இதற்கிடையே, மன்மோகன்சிங் அரசில் சிபுசோரன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த 28-ந் தேதி இவ்வழக்கில் நீதிபதி பி.ஆர்.கேதியா தீர்ப்பு அளித்தார். சிபுசோரன் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த சிபுசோரனை கோர்ட்டு வளாகத்திலேயே போலீசார் கைது செய்தனர். அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.
கைது செய்யப்பட்ட சிபுசோரன், நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு தண்டனை விவரம் அறிவிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. சிகிச்சை முடிவடைந்து சிபுசோரன், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பரபரப்பு விவாதம்
அதையடுத்து, நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை வழங்குவது குறித்து பரபரப்பு விவாதம் நடைபெற்றது. சிபுசோரன், கோர்ட்டில் ஆஜர்படுëத்தப்பட்டார். சிபுசோரன் தரப்பு வக்கீல் ஆனந்த், சிபுசோரனுக்கு குறைந்த தண்டனை அளிக்குமாறு வாதாடினார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-
சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக பாடுபட்டவர். அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். எனவே தண்டனையை நிர்ணயிக்கும்போது அவரது தகுதியையும், பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். எனவே அவரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யலாம்.
இவ்வாறு ஆனந்த் வாதாடினார்.
சி.பி.ஐ. வக்கீல் கோரிக்கை
ஆனால் சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சிபுசோரன் உத்தரவின் பேரில் நந்தகிஷோர் மேத்தா இந்த படுகொலையை செய்தார். சிபுசோரனிடமிருந்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் கொலை செய்ய நந்தகிஷோர் மேத்தா சம்மதித்தார். அவர் சசிநாத் ஜாவை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த சசிநாத் ஜாவை ரகசியமாக கொலை செய்தார். இதற்காக அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சிபுசோரன் டிக்கெட் கொடுத்தார்.
மேலும், நரசிம்மராவ் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் லஞ்சம் வாங்கியது, சசிநாத் ஜாவுக்கு தெரிந்து விட்டதால்தான் அவர் கொல்லப்பட்டு உள்ளார். எனவே, இது சாதாரண குற்றம் அல்ல. அசாதாரண சூழ்நிலையில் சசிநாத் ஜா கொலை செய்யப்பட்டு இருப்பதால், சிபுசோரனை விடுவிக்க கோருவது ஏற்புடையது அல்ல.
மரண தண்டனை அளிக்க வேண்டும்
தன் மீது சசிநாத் ஜா வைத்திருந்த நம்பிக்கையை சிபுசோரன் சீர்குலைத்து விட்டார். எனவே இந்த வழக்கு அரிதினும், அரிதான வழக்காக இருப்பதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதில் சிபுசோரன் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் நேரடியாக காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு அளித்த அதே தண்டனை, சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய சிபுசோரனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.ஆர்.கேதியா, மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி தண்டனை விவரத்தை அறிய மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் கோர்ட்டு முன்பு திரண்டனர். ஆனால் மாலை 5.30 மணிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
ஆயுள் தண்டனை
அதன்படி, மாலை 5.30 மணிக்கு நீதிபதி பி.ஆர்.கேதியா தண்டனை விவரத்தை அறிவித்தார். சிபுசோரன் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், சிபுசோரனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை சசிநாத் ஜாவின் தாயாருக்கும், தலா ரூ.2 லட்சத்தை சசிநாத் ஜாவின் 2 மகள்களுக்கும் பிரித்து அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றவாளிகளான மற்ற 4 பேரும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டவுடன் சிபுசோரன் அதிர்ச்சி அடைந்தார்.
அப்பீல்
இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. சிபுசோரன் தற்போது எம்.பி. ஆக உள்ளார். இருப்பினும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால், அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து இல்லை.
தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சிபுசோரனின் வக்கீல் நிருபர்களிடம் கூறினார்.
செய்தி: தினத்தந்தி.
No comments:
Post a Comment