Wednesday, December 13, 2006

என்கவுண்டரில் 'பங்க்'குமார்.

பிரபல ரவுடி "பங்க்' குமார் "என்கவுன்டரில்' சுட்டுக்கொலை

சென்னை: கொலை, ஆளை கடத்தி பணம் பறிப்பு, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி "பங்க்' குமார் நேற்றிரவு சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இவன் மீது நாற்பது வழக்குகள் உள்ளன. சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் குமார் என்ற "பங்க்' குமார் என்ற கொத்தவால் சாவடி குமார்(36). சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டதாரியான பங்க் குமார், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கும்பலை உருவாக்கினான்.

கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். கடந்த 1992ம் ஆண்டில் பரமசிவம் என்பவரை மாம்பலம் பகுதியில் கொலை செய்தான். இவ்வழக்கில் அவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பிரபல ரவுடியாக வளர்ந்து வந்த "பங்க்'குமார் தென் சென்னை பகுதியில் சைதாப்பேட்டை, தாம்பரம், குமரன் நகர், வேளச்சேரி உட்பட்ட பகுதியில் தனது ஆதிக்கத்தை வளர்த்தான். கடந்த 1993ம் ஆண்டில் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே இரண்டு கைதிகளை வெட்டிக் கொலை செய்தான். இந்த இரட்டை கொலை தான் "பங்க்' குமாருக்கு தென் சென்னை தாதா என்ற பெயரை பெற்று தந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக ரவுடி ஆதிக்கத்தை தென் சென்னை பகுதியில் நடத்தி வந்தான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாரை என்கவுன்டரில் தீர்த்துக் கட்ட போலீசார் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது மத்திய அமைச்சரின் காரிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்ததால், தப்பித்துக் கொண்டான். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் "பங்க்' குமாரின் செயல்கள் மீண்டும் தலையெடுத்தன. மயிலாப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள "ஷாப்பிங்' கட்டடத்தை அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் வாங்கிய நபருக்கு ஆதரவாக களம் இறங்கினான். இந்த ஏலத்தில் வேறு யாரும் கலந்து கொள்ளாதபடி "பங்க்' குமார் இருபது கார்களில் 60 அடியாட்களுடன் வந்து மயிலாப்பூரை கலக்கினான். இதுவே தி.மு.க., ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. போலீஸ் அதிகாரிகளுக்கும் அவன் பயப்படாமல் தனது வேலைகளை நடத்திக் கொண்டிருந்தான். ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்தான். கடந்த 9ம் தேதி மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்÷ட் தொழில் செய்து வரும் பஷீர் என்பவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டான். இது தொடர்பாக அவர் கமிஷன் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் "பங்க்' குமார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். திருநீர்மலைக்கு உட்பட்ட சீனிவாசன் நகர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை 7 மணிக்கு "பங்க்' குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் "பங்க்' குமாரை மடக்கி பிடிக்க முற்பட்டனர். அப்போது தப்பி ஓடிய "பங்க்' குமார் நான்கு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசினான். அதில் இரண்டு குண்டுகள் வெடித்தது. மற்ற இரண்டு குண்டுகளையும் அதே இடத்தில் போட்டு விட்டு டாடா சுமோ காரில் "பங்க்' குமார் தப்பினான். பின் தொடர்ந்த போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினான். அப்போது இன்ஸ்பெக்டர் நடராஜன் தனது துப்பாக்கியால் "பங்க்' குமார் மீது சுட்டார். மயங்கி விழுந்த "பங்க்' குமாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு "பங்க்' குமாரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.,வுக்கு போலீசார் தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளனர். காயம் அடைந்த சப்இன்ஸ்பெக்டர்கள் இருவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ம.க.,வில் எம்.எல்.ஏ., "சீட்' கேட்ட "பங்க்' குமார் சென்னையைச் சேர்ந்த பங்க் குமார் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பங்க் குமார் பா.ம.க., கட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தான். பா.ம.க.,வில் உள்ள முக்கிய தலைவர்களுடன் நெருக்கமானான். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ரவுடியாக இருந்த பங்க் குமார் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் விரும்பி "சீட்' கேட்டான். ஆனால், பா.ம.க., தலைமை பங்க் குமாருக்கு "சீட்' கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பங்க் குமாரின் ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தி.நகர், சைதாப்பேட்டை போன்ற பல சட்டசபை தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் போட்டு பிரச்னை செய்தனர். "பங்க்' குமாரின் கொடூர கொலைகள்... நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் படித்தவன் "பங்க்' குமார். இவனது நண்பன் உமர். கடந்த 1991ம் ஆண்டு சம்பத் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் உமரை வெட்டிக் கொலை செய்தனர். உயிர் நண்பனை வெட்டிக் கொன்றதும் ஆத்திரமடைந்தான் "பங்க்' குமார். உமர் சமாதிக்கு சென்றவன் "உன்னை வெட்டிக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவேன்' என்று ரத்த சபதம் செய்தான். அந்த சபதத்தை நிறைவேற்ற 1992ம் ஆண்டு உமரை வெட்டிக் கொன்ற கொலை கும்பலில் இடம் பெற்ற பரமசிவம் என்ற ரவுடியை "பங்க்' குமார் கொலை செய்தான். இது தான் அவனது முதல் கொலை. தாம்பரத்தில் மனைவியுடன் இருந்தான் பரமசிவம். அந்த வீட்டிற்குள் ஓட்டை பிரிந்து "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் குதித்தனர். வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரமசிவத்தை வெட்டிக் கொலை செய்தான் "பங்க்' குமார். அந்த ரத்தத்தை எடுத்து, பரமசிவன் மனைவி வாயில் ஊற்றினான். உமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பத்தையும் புருஷோத்தமனையும் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே 1994ம் ஆண்டு "பங்க்' குமார் வெட்டி சாய்த்தான். போலீஸ் பாதுகாப்போடு வந்த இரண்டு பேரையும் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், விடுதலை செய்யப்பட்டான். அடுத்து 95ம் ஆண்டு, முருகன் என்ற பரட்டை முருகனை "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் தீர்த்துக் கட்டினர். இதன் பின்னர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டான். பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினான். அடுத்து தி.மு.க., ஆட்சி வந்ததும் தி.மு.க.,வினரை கடுமையாக எதிர்த்தான். தி.மு.க., ஆட்சியில் கான்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட வழக்கிலும் போலீசார் அவனை தேடினர். மீண்டும் 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தனது செயல்களை குறைத்துக் கொண்டான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாருக்கு இரண்டு முறை போலீசார் குறி வைத்தனர். சைதாப்பேட்டை கோர்ட் அருகே அவனை மடக்கிப்பிடிக்க போலீசார் காத்திருந்த போது, ஜட்டியுடன் ஆற்றில் குதித்து ஓடிவிட்டான். "பங்க்' குமார் ஏழு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவன். அவன் மீது மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் * கமிஷனர் லத்திகா சரண் பேட்டி பிரபல ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவனது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்கு வந்த போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் கூறுகையில், ""பிரபல ரவுடி பங்க் குமார் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவன் ஏழு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று வந்துள்ளான். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பஷீர் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளான். பணத்தை கொடுக்க தாமதமாகவே மேலும் ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து, பஷீர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் "பங்க்' குமாரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்.ஐ., சுகுமாறன், ரவிக்குமார் மற்றும் நான்கு ஏட்டுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்துõர் சீனிவாசபுரம் விரிவு அருகே பங்க் குமாரை கைது செய்ய முயன்ற போது இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜனை அரிவாளால் அவன் வெட்ட முயன்றான். இதை தொடர்ந்து அவனுடன் இருந்த கூட்டாளி மூன்று பேரும் நாட்டு வெடிகுண்டை வீசி போலீசாரை தாக்கினர். இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் பங்க் குமாரை சுட்டுள்ளார். சென்னையில் மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

ஜாங்கிட் தனிப்படையின் தளபதி தில்லை நடராஜன் தமிழகத்தில் வடமாநில கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி.,யான ஜாங்கிட் வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் தில்லை நடராஜன். துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். இவரை தனிப்படையில் சேர்த்தார் ஜாங்கிட். வடமாநில கொள்ளைக்காரன் பவாரியா என்கவுன்டரில் முக்கிய பங்காற்றியவர் தில்லை நடராஜன். பதவி உயர்வில் இன்ஸ்பெக்டரான தில்லை நடராஜன் புறநகரில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மாநகர ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று பங்க் குமாரை என் கவுன்டர் செய்தவரும் தில்லை நடராஜன் தான்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்... "பங்க்' குமாரின் கொலைகளும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் வெளியே தெரிந்தன. ஆனால், அவனது பல அட்டூழியங்கள் வெளியே வரவில்லை. சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் பகுதியில் வசித்தவர்களுக்கு மட்டுமே இது தெரிந்த விஷயம். அழகான பெண்களை கண்டால், தனது வேலைகளை காட்டத் தொடங்கிவிடுவான். அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து, ராத்திரியில் அந்த வீட்டுக்கு போய்விடுவான். இப்படி பல பெண்களை மானப்பங்கம் செய்தவன் "பங்க்' குமார். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாருமே புகார் கொடுத்தது கிடையாது. காரணம், குடும்ப மானம் போய்விடும் என்பதால். மாம்பலத்தில் ஒரு நபரின் வீட்டில் இருந்த பெண் மீது கண் வைத்த இவன், பல ராத்திரியில் அந்த வீட்டிற்கு சென்றுவிட்டான். அந்த குடும்பத்தில் இருப்பவர்களால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அவனை எதிர்த்து போராடவோ, புகார் கொடுக்கவோ தைரியம் இல்லாதவர்கள். அந்த குடும்பம் கடைசியில் வீட்டை காலி செய்து கொண்டு, எங்கோ சென்றுவிட்டது. இப்படி பல பெண்களின் வாழ்வை சீரழித்தவன் தான் "பங்க்' குமார். கடைசியில் மனைவியின் தங்கையான ஹேமாவையும் துப்பாக்கி முனையில் பெங்களூருக்கு கடத்திச் சென்று கற்பழித்தான். இது தொடர்பாக மட்டுமே விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று பதிவானது. மற்றபடி அவனால், பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தது இல்லை.

செய்தி: தினமலர்

No comments: