Sunday, December 17, 2006

பதக்கம் பறிப்பு?


பாலின பிரச்னையில் சாந்தி!* ஆசிய விளையாட்டு பதக்கம் பறிப்பு?

புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தி பாலினம் தொடர்பான பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடம் பாலின ரீதியாக பெண்ணுக்கான குணாதிசயங்கள் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய இந்தியாவின் சாந்தி 2 நிமிடம் 3.16 வினாடிகளில் கடந்து வெள்ளி வன்றார். பதக்கம் வென்ற பிறகு இவர் பெண் தானா...? என்ற சந்தேகத்தை ஒரு வீராங்கனை கிளப்பியுள்ளார். இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனை போல் அல்லாமல் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதில் பெண்களுக்கான குணயியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரூ.15 லட்சம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சாந்தி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். இப் படி வறுமையை வென்று சாதித்ததால் பாராட்டு மழையில் நனைந்தார் சாந்தி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றதும் தமிழக அரசு கூட ரூ. 15 லட்சத்தை பரிசுத் தொகையாக அளித்தது. இந்திய தடகளத்துக்கு இன்னொரு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சாந்தி சோதனையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஊக்க மருந்து: இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கத்தில் வட்டு எறிதல் வீராங்கனை சீமாஅன்டில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்தியதில் இவர் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என தெரிவித்தது. இதையடுத்து பெரும் சிக்கலில் இருந்து தப்பினார். ஆனாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக சீமா அறிவித்தார். இந்த பிரச்னை ஓய்வதற்குள் சாந்தி சர்ச்சை மிகப் பெரும் புயலை இந்திய விளையாட்டு அரங்கில் கிளப்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பும் போது இனி அனைத்து வகையான சோதனைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்னைகளுக்கு விமோசனம் பிறக்கும்.

சாந்தி சர்ச்சையின் பின்னணி!: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த இவர், பாலின சோதனையில் சிக்கிக் கொள்ள பதக்கம் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாந்தி வெள்ளி வென்றார். அப்போது இவர் பெண் தானா என்ற சந்தேகம் மற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் மனதில் எழுந்துள்ளது. இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான குணவியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இந்த விபரம் ஏற்கனவே இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் அஷ்வின் குமார் கூறுகையில்,""எங்களது காலத்தில் இது போன்ற சோதனைகள் எல்லாம் இல்லை. தற்போது பரிசுத் தொகை அதிகம் என்பதால் தடகள வீரர், வீராங்கனைகள் குறுக்கு வழியில் பதக்கம் வெல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் ஊக்க சக்தியை அதிகப்படுத்த பல்வேறு மருந்து பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பாலினத்தை வேறுபடுத்தி காட்டும் சோதனைகள் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார். எந்த அடிப்படை: பாலினம் தொடர்பான சோதனையில் பிறப்பில் பிரச்னை, குரோமோசோம் மாற்றம், ஹார்மோன்களில் குழப்பம் போன்ற வகைகளில் ஆய்வு செய்யப்படும். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீராங்கனை சில நேரங்களில் தப்பலாம்.

சாந்தி மீது எந்த விதமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. திருச்சியில் இருந்து: சாந்தியின் கிராமம் திருச்சியிலிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ளது. வறுமையை கடந்து சாதித்த இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.சி.ஏ., முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் படித்த காலத்திலும் தடகளம், ஹாக்கி, ஈட்டி எறிதல் முதலான விளையாட்டுகளில் ஜொலித்தார். 200506ல் நடந்த தமிழக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்த இவர், இப்போது மிகப் பெரும் சோதனையில் சிக்கியுள்ளார். இதில் இருந்து மீள்வாரா சாந்தி...?

பயிற்சியாளர் நழுவல் :

சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ் பிரச்னையில் இருந்து நழுவ பார்த்தார். பிரபல "டிவி'க்கு பேட்டி அளித்த இவர்,""கடந்த இரண்டு வருடங்களாக தான் சாந்தியின் பயிற்சியாளராக இருக்கிறேன். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். அப்போது எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. பாலின சோதனையில் மாட்டிக் கொண்ட விபரம் எதுவும் தெரியாது,''என்றார்.

செய்தி: தினமலர்

No comments: