குழந்தைகள் பிணக்குவியல்
டெல்லி: 30 குழந்தைகளை கொன்ற கொடூரன்
டிசம்பர் 30, 2006
டெல்லி: டெல்லி அருகே மர்ம பங்களாவுக்குள் 30 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறநகர்ப் பகுதியான நோய்டா அருகே உள்ள நிதாரி என்ற கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இவர் கிரேன் டீலராக இருக்கிறார். இவரது வீட்டில் சதீஷ் என்ற சுரேந்திரா என்பவர் வேலைக்காரராக இருந்து வந்தார். சதீஷ் உத்தராஞ்சல் மாநிலம் அல்மோரா நகரைச் சேர்ந்தவர்.
நோய்டா 19வது செக்டார் பகுதியில் வசித்து வந்த பாயல் என்ற 20 வயதுப் பெண்ணை கடந்த மே மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து கௌதம் புத்தா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாயல் வைத்திருந்த செல்போனை தற்போது யார் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுரேந்திரா வேலை பார்த்து வந்த வீட்டின் சாக்கடைக் கால்வாயிலிருந்து பெரும் துர்நாற்றம் நேற்று வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சாக்கடையை தோண்ட உத்தரவிட்டனர். அப்படித் தோண்டியபோது எலும்புக் கூடுகள் சில சிக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சுரேந்திராவை தீவிரமாக விசாரித்தனர்.
அந்த விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டான் சுரேந்திரா. 30 வயதாகும் சுரேந்திரா, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளை சாக்லேட் கொடுத்தும், விளையாட்டுப் பொருட்களை கொடுத்தும் வரவழைப்பானாம்.
மொஹீந்தர் சிங்கின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவானாம். பிறகு அவர்ளின் உடல்களை சாக்குப் பையில் வைத்துக் கட்டி வீட்டுக்குள் புதைத்து விடுவானாம்.
சமீபத்தில் அவன் பாலியல் பலாத்காரம் செய்த 6 சிறுமிகளின் உடல்களை சாக்குப் பையில் கட்டி சாக்கடைக்குள் போட்டு விட்டான். அந்த உடல்களிலிருந்து வந்த துர்நாற்றம்தான் இப்போது சுரேந்திராவைக் காட்டிக் கொடுத்து விட்டது.
காணாமல் போன பாயலையும் இவன்தான் கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்துள்ளான். பாயலின் செல்போனையும் இவனே பயன்படுத்தி வந்துள்ளான்.
சுரேந்திரா கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து போலீஸார் மொஹீந்தர் சிங்கின் வீடு முழுவதும் தோண்டி சோதனை போட்டனர். அப்போது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வரவே போலீஸாருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. வீட்டு வளாகம் முழுவதும் பிணக் குவியல்களாக உள்ளன.
இதுவரை 30 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம். அத்தனை பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து சுரேந்திரா மற்றும் மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களையும் வீட்டிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.
சில உடல்கள் முற்றிலும் உருக்குலையாமல் பாதி அழுகிய நிலையில் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள எலும்புக் கூடுகள், அழுகிய உடல்களை வைத்துப் பார்க்கும்போது 30 பேரின் உடல்களாக அவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மரபணு சோதனைக்குப் பிறகே எத்தனை பேரின் உடல்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என நோய்டா எஸ்.பி. ரத்தோர் கூறியுள்ளார்.
நிதாரி கிராமத்திலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் 21 சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறுமிகள்தான் அதிகம். ஆனால் போலீஸார் பதிவு செய்யாமல் விட்ட புகார்களையும் சேர்த்து 31 பேர் காணாமல் போயுள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
இவர்கள் அனைவரையும் சுரேந்திராதான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. எலும்புக் கூடு குவியல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதும் நிதாரி கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக மொஹீந்தர் சிங் வீட்டு முன்பு கூடி கலாட்டாவில் இறங்கினர்.
வீட்டின் மீது கல்வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தாக்குதலில் சேதமடைந்தது.
எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அணியும் செருப்புகள் அதிக அளவில் கிடைத்தன. அதேபோல சீருடைகள், டிபன் பாக்ஸ், பள்ளிக்கூட பைகள் உள்ளிட்டவையும் குவியல் குவியலாக கிடைத்துள்ளன.
நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக சிக்கியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி : தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment