மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி
கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது: பிப்ரவரி 20-ந் தேதி வழங்கப்படுகிறது
புதுடெல்லி, டிச.22-
சிறந்த இலக்கிய படைப்புகளை வழங்கியவர்களுக்கு, உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க, 23 இந்திய மொழிகளை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
தமிழ் மொழி சார்பில் ஈ.சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.பெரிய கருப்பன் (தமிழண்ணன்), புவியரசு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். இக்குழு, பல்வேறு இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து விருதுக்கு உரியவர்களை சிபாரிசு செய்தது.
7 கவிதைகள், 4 நாவல்கள், 4 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள், 3 கட்டுரைகள், ஒரு பயணக்கட்டுரை, ஒரு சுயசரிதை ஆகியவை விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு சாகித்ய அகாடமி போர்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று விருதுக்கு உரியவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பிரபல கவிஞர் மு.மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். `ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்ற கவிதை நூலுக்காக இவருக்கு விருது வழங்கப்படுகிறது. மு.மேத்தா ஏராளமான கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி உள்ளார். நிறைய சினிமா பாடல்களையும் எழுதி உள்ளார்.
இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இலக்கியவாதிகள் வருமாறு:-
கவிஞர்கள் தர்ஷன் தர்ஷி (டோக்ரி மொழி), ஞானேந்திரபதி (இந்தி), ஷபி ஷாக் (காஷ்மீரி), பன்ஷிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷ்தேவ் மாதவ் (சமஸ்கிருதம்),
நாவலாசிரியர் அமர் மித்ரா (வங்காளம்), ஆஷா போகே (மராத்தி), நாடக ஆசிரியர்கள் அஜ்மீர் சிங் அலக் (பஞ்சாபி), கிரத் பப்தி (சிந்தி),
சிறுகதை ஆசிரியர்கள் அதல்நந்தா கோஸ்வாமி (அசாமி), விபுதி ஆனந்த் (மைதிலி), எம்.சுகுமாரன் (மலையாளம்), பயண கட்டுரைக்காக சரத்சந்த் தியாம், சுயசரிதைக்காக ஸ்ரீராம் சந்திர மர்மு.
ஆங்கில படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது, பின்னர் அறிவிக்கப்படும்.
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இவ்விருது தாமிர பட்டயமும், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அடங்கியது ஆகும்.
செய்தி: மாலைமலர்
1 comment:
நல்லதொரு செய்தி
நன்றி.
Post a Comment