பாலசிங்கம் மரணம்
புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் மரணம்
லண்டன்: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவருமான ஆண்டன் பாலசிங்கம்(68) லண்டனில் நேற்று மரணமடைந்தார்.
சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்திகளை வகுப்பதிலும், முக்கிய முடிவுகள் மேற்கொள்வதிலும் பிரதான பங்களிப்பு அளித்து வந்தவர் ஆண்டன் பாலசிங்கம். இவர் விடுதலைப் புலிகளின் சட்டத் தூணாக கருதப்பட்டவர். ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துக்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முதல்முறையாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உடனிருந்த பாலசிங்கம் சர்வதேச நிருபர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து சமாளித்தார்.
கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் துவங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பாலசிங்கம், சில ஆண்டுகளாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாலசிங்கத்துக்கு 35 ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. கடந்த 90ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம் உடல் நிலை கடுமையாக மோசமடைந்தது. இவரின் பித்த நாளத்தில் புற்றுநோய் அதிகரித்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நுரையீரல், கல்லீரல், அடிவயிறு மற்றும் எலும்புகளில் புற்றுநோய் வேகமாக பரவியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்றிரவு ஆண்டன் பாலசிங்கம் லண்டனில் மரணமடைந்தார். லண்டனில் உள்ள அவரின் வீட்டில் பாலசிங்கம் மரணமடைந்ததாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்தார். பாலசிங்கத்தின் இறுதிச் சடங்கு லண்டனிலேயே நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கத்தின் மனைவி ஆடெல். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இருவரும் புலிகளின் விடுதலை இயக்கம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளனர்.
உடல் நிலை மோசம் அடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடந்த புலிகள் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவில்லை.
ஆரம்ப காலத்தில் இலங்கையில் தமிழ் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் பிரிட்டிஷ் துõதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக இலங்கைக்கு வராமல் இருந்த பாலசிங்கம் 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இலங்கை வந்தார். அப்போது தான் இலங்கையில் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கவில்லை. மீண்டும் லண்டன் திரும்பினார். பின்னர் ஜப்பான், தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதல் கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை வரை புலிகள் தரப்பின் குழுவிற்கு பாலசிங்கமே தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: தினமலர்
No comments:
Post a Comment