Friday, December 29, 2006

மதிமுகவிலிருந்து வைகோ நீக்கம்

வைகோவை நீக்கியது போட்டி பொதுக் குழு:
செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொ.செ!


டிசம்பர் 29, 2006

சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர்.

இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.

மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்க சீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.

கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி (வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல் கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியது குறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.

கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக் குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவை கட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

1 comment:

Anonymous said...

காமடீ தாங்கமுடியலப்பு:-)))