பயங்கர விபத்து
காஞ்சிபுரம் அருகே ஷேர் ஆட்டோ - மின்சார ரயில் மோதல்:
13 பெண்கள் உள்பட 17 பேர் சாவு
மின்சார ரயில் மோதி, ஷேர் ஆட்டோவில் தொங்கும் உடல்கள்
காஞ்சிபுரம், நவ. 1: காஞ்சிபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் ஷேர் ஆட்டோ மீது மின்சார ரயில் மோதி 13 பெண்கள் உள்பட 17 பேர் இறந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் டாக்டரிடம் கார் டிரைவராக உள்ளார்.
ராஜேந்திரன் மகன் ஆல்பர்ட்டுக்கும் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்துவின் மகள் பவானிக்கும் கடந்த வெள்ளிக்கிழமைதான் திருமணம் நடந்தது.
இந் நிலையில் ராஜேந்திரனின் மாமியார் எலிசபெத் புதுப்பாக்கத்தில் திங்கள்கிழமை மாலை இறந்து விட்டார். ராஜேந்திரன் புதுப்பாக்கம் கிராமத்துக்கு முன்னரே சென்று விட்டார்.
அதற்காக ஓரிக்கை காந்தி நகரில் இருந்து ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 16 பேர் செவ்வாய்க்கிழமை காலை ஷேர் ஆட்டோவில் புதுப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றனர்.
ஓரிக்கை விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த மஸ்தான் (25) என்பவர் ஷேர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
தக்கோலம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலையில் வழக்கமாக செல்லும் மின்சார ரயில் அவ்வழியாகச் சென்றது. புதுப்பாக்கம் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் மேட்டில் ஏற முடியாமல் ஷேர் ஆட்டோ தண்டவாளத்தின் மீது நின்று விட்டது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் மோதியது. அதே வேகத்தில் ஷேர் ஆட்டோ அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது.
ஷேர் ஆட்டோவில் இருந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ரயில் சக்கரங்களில் சிக்கி தலை, கை, கால் வேறு வேறாக இறந்து கிடந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து ஷேர் ஆட்டோ நொறுங்கிக் கிடந்த பகுதி வரை பலரது உடல்களின் பல்வேறு பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. விபத்து நடந்தபோது அங்கிருந்த கிராம மக்கள் எவராவது காயமுற்று இருந்தால் காப்பாற்றலாம் என ஓடி வந்தனர். ஆனால் ஷேர் ஆட்டோவில் சென்ற ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை.
தகவலறிந்ததும் ஆட்சியர் பிரதீப் யாதவ், டிஐஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. அமல்ராஜ், எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், ஆர்.டி.ஓ. சீதாலட்சுமி, தாசில்தார் மஞ்சுளா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சடலங்களை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர் நல அமைச்சர் தாமோ.அன்பரசன், தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் மான்சிங் ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
விபத்தில் இறந்தவர்கள்:
ஓரிக்கை காந்தி நகரைச் சேர்ந்த அர்ச்சுனனின் மனைவி வனமயில் (35), அமாவாசையானின் மனைவி மங்கை (45), ராமன் (65), முத்துகுமாரின் மனைவி பவுனு (25), அப்பாசாமியின் மனைவி தனபாக்கியம் (60), கேசவனின் மனைவி வள்ளியம்மாள் (50), நாகப்பனின் மனைவி கோவிந்தம்மாள் (60), முனுசாமியின் மனைவி குள்ளம்மாள் (50), சேட்டுவின் மகன் ராஜேஷ் (20), அன்னப்பனின் மனைவி முனியம்மாள் (48), முருகனின் மனைவி குணசுந்தரி (40). ஆட்டோ டிரைவர் மஸ்தான் (28).
புதுமணப்பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி:
இவ் விபத்தில் ஓரிக்கை காந்தி நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர். அவரது மனைவி வசந்தி (35), மகன் அருண் (21), மகள்கள் அருணா (19), அனு (15), மருமகள் பவானி (20) புது மணப்பெண். புது மனைவியை இழந்த ராஜேந்திரனின் மகன் ஆல்பர்ட், தன் தந்தையைத் தவிர குடும்பத்தினர் அனைவரையும் இழந்து கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
செய்தி : தினமணி
No comments:
Post a Comment