தமிழகம் வயது 50
பொன் விழா கொண்டாடும் தமிழ் மாநிலம்:
எல்லை காக்க 50 ஆண்டுகளுக்கு முன் நடத்திய போராட்டம்
பா. ஜெகதீசன்
சென்னை, நவ. 1: "தமிழ் மாநிலம்' அமைந்த பொன் விழாவை தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தற்போது கொண்டாடுகின்றன.
சென்னையையும், தனது எல்லைகளையும் காக்க சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் நடத்திய போராட்டங்களும், அவற்றில் ஈடுபட்டவர்கள் செய்த தியாகங்களும் மறக்க முடியாதவை.
சுதந்திரம் அடைந்தபோது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்டவற்றின் சில பகுதிகளும் இடம் பெற்றிருந்தன.
தமிழகத்தின் வடக்கு எல்லை திருப்பதி வரை பரவி இருந்ததாகப் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு காலகட்டம் வரை வடார்க்காடு மாவட்டத்தில் தான் திருப்பதி இருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள் (16.8.1947) ம.பொ. சிவஞானம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதிக்குச் சென்றார். "திருப்பதி தமிழர்களுக்கே சொந்தம்' என முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் ம.பொ.சி.க்கு எதிராகப் பதில் போராட்டம் நடத்தினர்.
"தமிழகத்திடம் இருந்து சென்னையையும் மீட்போம்' என ஆந்திரத் தலைவர்களில் ஒருவரான என்.ஜி.ரங்கா அப்போது பிரகடனம் செய்தார்.
ஒருமித்த எதிர்ப்பு: சென்னை ராஜதானியில் இருந்து ஆந்திரப் பகுதிகளைப் பிரித்து தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
சென்னை நகரத்தைத் தங்களுக்குத் தரும்படி ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இதை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்தது.
தங்களது இடைக்காலத் தலைநகராக சிறிதுகாலத்துக்கு சென்னையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி ஆந்திரம் கேட்டது. அதை தமிழகம் ஏற்கவில்லை.
ம.பொ.சி. நடத்திய வடக்கு எல்லைப் போராட்டம்: தனி ஆந்திர மாநிலம் உருவானபோது அதுவரை தமிழகத்தில் இடம் பெற்றிருந்த சித்தூர் மாவட்டம் ஆந்திரத்தின் வசம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் செய்தார். காவல் துறையின் தடியடியையும் பொருட்படுத்தாது, எல்லையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர். பின்னர் ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தைத் தாற்காலிகமாக ஒத்தி வைத்தார்.
இதற்கிடையே, திருத்தணியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆந்திரத்தைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குள் புகுந்து, பொருள்களை உடைத்தனர். ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். வன்முறையை ஒடுக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
பின்னர் ம.பொ.சி. விடுத்த வேண்டுகோளையடுத்து, அங்கு வன்முறை நின்றது.
தமிழகத்தின் வடக்கு எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணாததைக் கண்டித்து, அதே ஆண்டு ஜூலை 3-ம் தேதி திருத்தணியில் ம.பொ.சி. தடையை மீறி மறியல் செய்தார். கைது செய்யப்பட்ட அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கமிஷன்கள் அமைப்பு: அப்போது பிரதமராக இருந்த நேருவிடம் முதல்வராக இருந்த ராஜாஜி பேசினார். "இரு மாநிலங்களின் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். எனவே, போராட்டங்களை நடத்த வேண்டாம்' என நேரு வேண்டுகோள் விடுத்தார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, சில நாள்கள் சிறை வாசத்துக்குப் பிறகு ம.பொ.சி. விடுதலை ஆனார்.
எல்லைப் பிரச்சினையை தமிழகமும், ஆந்திரமும் சுமுகமாகப் பேசித் தீர்க்க முன் வந்தன. எனவே, எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க முதலில் அமைக்கப்பட்ட பசல் அலி கமிஷன் எத்தீர்வையும் தரவில்லை.
மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையில் உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே, புதிதாக படாஸ்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. 1.4.1960-ல் அக்கமிஷன் தனது தீர்ப்பை அளித்தது. அதன்படி திருத்தணி தாலுகா அப்படியே தமிழகத்துக்கு கிடைத்தது. அதேபோல, ஆந்திரத்தின் புத்தூர், சித்தூர் ஆகிய தாலுகாக்களில் இருந்தும் சில பகுதிகள் தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன.
தெற்கு எல்லைப் போராட்டம்: அக்காலத்தில் திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்த தமிழர் வாழும் பகுதிகளை மீட்க பெரும் போராட்டம் நடைபெற்றது.
1954 ஜூனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமை ஏற்று, போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். அவரது அழைப்பை ஏற்று, ம.பொ.சி. மூணாறுக்குச் சென்றார். அவரது முன்னிலையில் எல்லை மீட்கும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தது.
11 பேர் உயிர்த் தியாகம்: நேசமணி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 11.8.1954-ல் தென் திருவிதாங்கூரில் கல்குளம் தாலுகாவில் பேரணி நடைபெற்றது. மலபார் ரிசர்வ் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பேரணியைக் கலைத்தனர். இதில் 11 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இதையடுத்து திருவிதாங்கூர் -கொச்சி சமஸ்தானத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
மாநிலங்களின் எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்திருந்த பசல் அலி கமிஷன் 1955-ல் தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்தது. கல்குளம், செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு ஆகிய தாலுகாக்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என அந்த கமிஷன் கூறியது.
தமிழர்கள் அதிகம் வாழும் பீர்மேடு, தேவிகுளம் ஆகிய தாலுகாக்களைத் தமிழகத்துக்கு அளிக்க அந்த கமிஷன் மறுத்து விட்டது.
நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனை தமிழகத்துக்குக் கிடைத்தது.
செய்தி: தினமணி
No comments:
Post a Comment