விஜயகாந்த் மண்டபம்
விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும்! : "வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு
சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரிய மேம்பாலம் கட்ட மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, நடிகர் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உட்பட நுõற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களை கையகப்படுத்தி அவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டது.இடத்தை கையகப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயகாந்துக்கு தெரியப்படுத்தியது. அப்போது விஜயகாந்த் அரசியல் கட்சியை துவக்கவில்லை. இடத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீசை டி.ஆர்.ஓ., வழங்கிய நேரத்தில், அரசியல் கட்சி துவங்கியிருந்தார் விஜயகாந்த். கல்யாண மண்டபத்தில் கட்சி அலுவலகத்தையும் அமைத்து இருந்தார். திருமண மண்டபம் இடிக்கப்படாமல் தடுப்பதற்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் பேசினார். அப்போது, தனது கட்டடம் இடிபடாமல் மேம்பாலத்தை அமைப்பதற்கு வசதியாக மாற்று திட்டம் ஒன்றையும் கருணாநிதியிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பு பற்றிய விவரத்தை தி.மு.க., வெளியிட்டதால் அக்கட்சி மீது விஜயகாந்த் அதிருப்தியடைந்தார்.
எனினும் விஜயகாந்த் அளித்த மாற்று திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டடம் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது, அதில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இதன் பின் தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும், ஆளுங்கட்சி மீதான விஜயகாந்தின் விமர்சனம் கடுமையானது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதும், தி.மு.க.,வை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.இதனால் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது. இந்நிலையில், விஜயகாந்தின் மாற்று திட்டத்தை "இந்திய ரோடு காங்கிரஸ்' என்ற மத்திய அரசு நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் 125வது ஆண்டு வணிக செயல்முறை பற்றிய விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. இப்பணிக்கென 168 பேருடைய நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருந்தது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து 164 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பங்களை கொடுத்தனர். ஆனால், நிலம் கையகப்படுத்துவற்கு நடிகர் விஜயகாந்த் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது போல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நிலத்திற்குச் சொந்தமானவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
நடிகர் விஜயகாந்த் தரப்பில் வக்கீல் ஒருவர் மாற்றுத் திட்டம் ஒன்றை கொடுத்தார். அதற்கான வரைபடத்தையும் சமர்ப்பித்தார். அதில் பாரிமுனையில் இருந்து பாடி செல்வதற்கு பாதை இல்லை. அவர் கொடுத்துள்ள மாற்றுத் திட்டத்தை சில தொழில்நுட்ப காரணங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மண்டபத்தைச் சுற்றி, 40 மீட்டர் சுற்றளவுக்கு நிலம், மேம்பாலம் கட்ட தேவைப்படுவதால் இந்த மாற்றுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால், மாற்றுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணி துவங்கும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணியால் 168 பேர் பாதிக்கப்படுவர்; அவர்களில் விஜயகாந்தும் ஒருவர். சென்னை துறைமுக பொறுப்புக் கழக அறங்காவலராக இருக்கும் சண்முகம் என்பவரும் பாதிப்படுகிறார். இந்திய சாலை குழு விதிகள் படி விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்றுத் திட்டம் பொருந்தாது. போக்குவரத்து நெரிசலை தடுக்க இந்த நடவடிக்கையை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. திருமண மண்டபம் விஜயகாந்தின் மனைவி பெயரில் உள்ளது.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.
மத்திய அமைச்சரின் அறிவிப்புப்படி இன்னும் சில நாட்களில் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளது. மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணியை துவக்க உள்ளதால், இடிப்பு பணி உடனடியாக துவக்கப்படும் எனத் தெரிகிறது. இதை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களா அல்லது கோர்ட்டுக்கு செல்வார்களா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், இந்த இடிப்பு சம்பவம் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலை இன்னும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: தினமலர்
No comments:
Post a Comment