Thursday, November 16, 2006

இலங்கை தமிழர்களுக்கு உதவி

இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்:
பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு


சென்னை, நவ. 16-

இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கி வருகிறது. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

குண்டுவீச்சுக்கு பயந்து தமிழர்கள் ஊரை காலி செய்துவிட்டு காடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். தமிழர்கள் பகுதிக்கு செல்லும் சாலைகளையும் சிங்கள ராணுவம் துண்டித்து விட்டது. இதனால் அவர்கள் உணவு கிடைக்காமல் பசி-பட்டினியால் தவிக்கின்றனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் தங்கும் தமிழர்களுக்கு உணவு பொருடங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத் தினரால் இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியும், படுகாயப்படுத்தப்படுவது பற்றியும் 10.11.2006 அன்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நகல் ஒன்றை - நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவரும், என்னுடைய சகாவுமான டி.ஆர்.பாலு என்னை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பு இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பெண் களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு எந்தவிதமான நியாயமும் கிடையாது.

இலங்கையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் வன்முறையின் காரணமாக தமிழ் மக்கள் உயிரிழப்பது பற்றி எங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இலங்கை அரசுக்கு இந்த முறையும் எங்களுடைய உணர்வுகளை திரும்பவும் எடுத்துரைப் போம்.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும் என்பதையும் அதன் மூலமாகத் தான் தமிழர்களுடைய உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள முடியுமென்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு 5200 மெட்ரிக் டன் அரிசியையும், 1500 மெட்ரிக் டன் சர்க்கரையையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரையும் அனுப்பி வைக்கவுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படையிலான இலங்கையில் தமிழர் களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற எங்களுடைய எண்ணம் ஆழ மானதும், தொடர்ந்து இருந்து வருவதுமாகும்.

எனினும் இப்பொழுது அப்பாவி மக்கள் கொல்லப் படுவது நிறுத்தப்பட்டு, மனிதாபிமான அடிப்படை நிலை நிறுத்தப்பட வேண்டு மென்பதுதான் முதன்மையானதாகும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்லவிருக்கிறார். அப்பொழுது இலங்கை அரசுக்கு நமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பார்.

இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளையும், சலுகை களையும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார். அடுத்து, இலங்கைக் குடியரசு தலைவர் ராஜபக்சேயை நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்.

இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர்

No comments: