3 பேருக்கு தூக்கு
சதாம் உசேன் உள்பட 3 பேருக்கு தூக்கு!
ஒருவருக்கு ஆயுள் 3 பேருக்கு 15 ஆண்டு சிறை
நவம்பர் 05, 2006
பாக்தாத்: 182 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் உள்பட 3பேருக்கு தூக்குத் தண்டனையும், முன்னாள் துணை அதிபர் ரமதானுக்கு ஆயுள் தண்டனையும், பாத் கட்சியைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 15 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு துஜைல் என்ற ஊரில், தனக்கு எதிராக ஷியா முஸ்லீம்களில் சிலர் கொலை சதித் திட்டத்தை தீட்டியதால் ஆத்திரமடைந்த சதாம் அதற்குக் காரணமானவர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 182 ஷியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க படையினரின் ஊடுறுவலுக்குப் பின்னர் சதாம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், 182 பேர் கொலை செய்யயப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
முதல் குற்றவாளியான சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் அவர் ஈடுபட்டதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இன்னொரு குற்றவாளியான அவாத் ஹமாத் அல்பாந்தர் என்பவருக்கும் தூக்குத் தண்டனையும், சதாம் உசேனின் தம்பியான பர்ஸான் இப்ராகிம் அல் திக்ரிதிக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் துணை அதிபர் தாஹா யாசின் ரமதானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பாத் கட்சியைச் சேர்ந்த 3 நிர்வாகிகளுக்கு தலா 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இந்த 3 பேர் மீதான கொலை மற்றும் சித்திரவதை புகார்கள் நீரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் தெகிவித்தார்.
முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகம்மது அஸாவி அலி மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி அவரை விடுவிப்பதாக அறிவித்தார்.
முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளார்க், தீர்ப்பு வழங்கப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, கிளார்க்கை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிளார்க வெளியேற்றப்பட்டார்.
தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பு சதாம் உசேனை எழுந்து நிற்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நான் உட்கார்ந்துதான் இருப்பேன் என்று சதாம் உறுதியாக கூறினார். இதையடுத்து காவலர்கள் அவரை கட்டாயப்படுத்தி எழுந்ந்து நிற்க வைத்தனர்.
பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது கோபத்துடன் ஆவேசமாக பேசினார் சதாம். அல்லாஹு அக்பர், ஈராக் வாழ்க. ஈராக் மக்கள் வாழ்க, நீங்கள் இந்த்த தீர்பபை சொல்லும் தகுதி படைத்தவர் அல்ல. ஆக்கிரமிப்பாளர்களின் முகமுடி நீங்கள், உங்களுக்கு என்னைத் தண்டிக்கும் உரிமை இல்லை.
இது எங்களது பூமி. இங்கே ஆக்கிரமித்து உள்ளே புகுந்தவர்களால் நியமிக்கப்பட்ட நீங்கள் எங்களைத் தண்டிக்க முடியாது என்று கோபமாக கூறியபடி இருந்தார். சதாம் உசேன் மீதான தீர்ப்பை சொல்லி முடித்தவுடன் சதாமை அங்கிருந்து வெளியே கொண்டு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் சதாமை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
சதாம் உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்து கொள்ள ஈராக் சட்டப்படி உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மேல் முறையீட்டிலும் அவர்களது தண்டனை உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்.
தீர்ப்பையொட்டி ஈராக் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தீர்ப்பு செய்தி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டுப் படையினரும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சதாம் ஆதரவாளர்கள் சில இடங்களில் தாக்குதலைத் தொடங்கி விட்டனர். சதாம் சார்ந்த சன்னி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அகமதியா மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் பாக்தாத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. துஜைல், சதாமின் சொந்த மாகாணம் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பாக்தாத் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. பாக்தாத் மற்றும் அருகாமையில் உள்ள இரண்டு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் அவரது எதிர்ப்பாளர்கள் துப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சதாமின் சொந்த ஊரான திக்ரிதியில், பெருத்த சோகம் காணப்படுகிறது.
ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் சதாமின் எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வன்முறை மற்றும் கலவரம் வெடிக்காமல் தடுக்கும் பொருட்டு ஈராக் ராணுவம், போலீஸ் மற்றும் பன்னாட்டுப் படையினர் ஈராக் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை: சதாம்
முன்னதாக, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதை தைரியமாக எதிர்கொள்வேன் என்று சதாம் உசேன் கூறியுள்ளார். தீர்ப்பையொட்டி அவரது வழக்கறிஞர் துலாமி சதாமை சிறையில் சென்று சந்தித்தார்.
அப்போது சதாம் கூறியது குறித்து துலாமி கூறுகையில், மரண தண்டனைக்குத் தான் பயப்படவில்லை என்று சதாம் கூறினார். அவர் ஆவேசமாக உள்ளார். அதேசமயம், தைரியமாகவும் உள்ளார்.
என்னைத் தூக்கில் போடாதீர்கள். நான் ராணுவ வீரன். என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று அவர் கூறினார் என்றார் துலாமி. அவர் மேலும் கூறுகையில், சதா¬க்கு மரண தண்டனை விதித்தால் நாட்டில் அமைதி போய் விடும். ரத்த ஆறு ஓடும். நரகத்தின் கதவைத் திறக்கப் போகிறார்கள்.
இந்தத் தண்டனையால் அமெரிக்காவுக்கும், அரபு, முஸ்லீம் நாடுகளுக்கும் நிரந்தரப் பகை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் துலாமி.
தற்போது சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி: தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment