விசாரணை விபரம்
சதாம் வழக்கு: விசாரணை-தீர்ப்பு வரை...
பாக்தாத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகள் விவரம்:
2005, அக்.19: இராக்கின் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்கள் 1982-ல் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் மீது பாக்தாதில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்பாவி என்றும் குற்றமற்றவர் என்றும் தன்னை சதாம் வர்ணித்துக் கொண்டார்.
அக்.20: சதாமுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அகமது அல் பாந்தரின் வழக்கறிஞர் சதுன் ஜனாபாய் பாக்தாதில் படுகொலை செய்யப்பட்டார்.
நவ.8: இராக் முன்னாள் துணை அதிபரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தஹா யாசினின் வழக்கறிஞர் ஏ.எம்.அபாஸ் பாக்தாதில் கொலை செய்யப்பட்டார்.
நவ.9: விசாரணை நீதிமன்றம் சட்டரீதியில் செல்லத்தக்கதா என்று சதாம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
நவ.28: அரசு தரப்பு முதலாவது சாட்சியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது.
டிச.5: துஜைல் கிராமத்தில் நடைபெற்ற ஒட்டுமொத்த கைது, சித்திரவதை, கொலை குறித்து இரண்டு சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர்.
2006, ஜன.23: குர்து இனத்தவரான ரபீப் ரஷீத் அப்துல் ரஹ்மான் என்பவரை இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிமன்றம் நியமித்தது. உறுதி குறைவானவர் என்ற கடும் விமர்சனம் காரணமாக ரிஸ்கர் அகமது அமீன் ராஜிநாமா செய்ததையடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டது.
பிப்.28: ஷியா முஸ்லிம்களை சித்திரவதை செய்து கொலை செய்ய சதாம் ஹுசைன் உத்தரவிட்டது தொடர்பான அவரது கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மார்ச் 1: தன்னை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகப்படும் துஜாயில் கிராமத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக சதாம் ஹுசைன் ஒப்புக் கொண்டார்.
ஏப்.17: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள சதாமின் கையெழுத்தின் நம்பகத்தன்மையை நிபுணர்கள் உறுதி செய்தனர்.
மே 15-17: சதாம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர்.
ஜூன் 19: வழக்கில் சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் கோரினார்.
ஜூன் 21: சதாம் தரப்பு வழக்கறிஞர் கமீஸ் அல் ஒபீதி கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் சதாம் ஹுசைன்.
ஜூலை 26: இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட சதாம், 18 நாள்களுக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டார். தூக்கிலிடப்பட்டு சாவதை விடவும் சுடப்பட்டு இறப்பதையே விரும்புவதாக குறிப்பட்டார் சதாம்.
ஜூலை 27: வழக்கு விசாரணை அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அக்.29: சதாம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கலீல் அல் துலாமி அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு கடிதம் எழுதினார்.
நவ.5: சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு வழக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்.
செய்தி: தினமணி
No comments:
Post a Comment