Wednesday, November 08, 2006

காளிமுத்து காலமானார்

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மரணம்

நவம்பர் 08, 2006

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

கமுதி அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் பிறந்த காளிமுத்துவுக்கு நிர்மலா, மனோகரி என இரு மனைவியர். இவர்களில் நிர்மலா சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அவர் இறந்ததிலிருந்தே காளிமுத்து மனம் உடைந்து காணப்பட்டார். அதுவே அவரது உடல் நலிவுக்கும் முக்கியக் காரணமானது.

சில மாதங்களுக்கு முன் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் உடல் நிலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அவரை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக காளி¬த்துவால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் காளிமுத்துவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்து மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். காளிமுத்துவின் உடல் முதலில் செனடாப் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காளிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெ இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

காளிமுத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

No comments: