Sunday, November 05, 2006

சதாம் வழக்கில் தீர்ப்பு

சதாம் உசேனுக்கு மரண தண்டனை- தீர்ப்பை கேட்டு சதாம் உசேன் ஆவேசம்

பாக்தாத், நவ. 5-

பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் தொடுத்தது. கடும் தாக்குதலுக்குப் பிறகு சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்க கூட்டணி படை அகற்றியது. ஆனால் சதாம் உசேன் அமெரிக்க படையிடம் சிக்காமல் பதுங்கி இருந்தார்.

பல மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை அமெரிக்க படை 3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்தது.சதாம் ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு அமீது கர்சாய் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சதாம் உசேன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தனது ஆட்சி காலத்தில் சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை கொன்றதாகவும், 1980-ம் ஆண்டு துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லிம் மக்களை கொன்று குவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாக்தாத்தில் இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ரவூப் அப்துல் ரகுமான் தலைமையில் 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சதாம் உசேனின் வக்கீல்கள் பலர் கடத்தப்பட்டனர். விசாரணை கூண்டில் உட்கார்ந்தபடியே சதாம் உசேன் நீதிபதியுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். பல தடவை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளிநடப்பு செய்தார். வழக்கு விசாரணையில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகவும், நீதிபதி அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சதாம் உசேன் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஆனது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சதாம் உசேனுடன் அவரது சகோதரர், உதவியாளர் உள்பட மேலும் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி தூக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றே அனைத்து வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. ஒருவேளை அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதை யொட்டி ஈராக் முழுவதும் பதட்டம் உருவாகி உள்ளது. ஏற்கனவே சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள், சன்னி பிரிவினர் ஈராக் அரசுக்கு எதிராகவும், அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சதாம் உசேன் வழக்கில் தீர்ப்பு வருவதால் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாடு முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக வேலையில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்த சதாம் உசேனை சில அரபு நாடுகளும், இதர முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கின்றன. அந்த நாடுகளிலும் பதட்டம் நிலவுகிறது. சதாம் உசேனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவை கண்டித்தும் ஜோர்டான் உள்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அதை ஒட்டிய 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரம் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஈராக்கில் ரத்த ஆறு ஓடும் அபாயம் அதிகரித்துள்ளது.

வாகன போக்குவரத்தும் சில நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்தாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஷியா மற்றும் குர்து இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சதாம் உசேன் ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இன்று தீர்ப்பு வருவதால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.

சதாம் வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதி அப்துல் ரகுமான் குர்து இனத்தை சேர்ந்தவர். சதாம் உசேனால் இவரது இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இன்று அந்த நீதிபதி வாசிக்கும் தீர்ப்பு 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது. அதை முழுமையாக படித்து முடிக்க பல மணி நேரம் ஆகும். தீர்ப்பு மற்றும் தண்டனையை முழுமையாக ஒரே நாளில் அறிவிக்க முடியாததால் கட்டம் கட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல் செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் தாமதம் ஆகும்.

சதாம் உசேன் வாழ்க்கை குறிப்பு

1937 ஏப்ரல் 28-பாக்தாத் அருகே திக்ரிக் பகுதியில் உள்ள அவுஜா கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார்.

1956 ஈராக்கின் பாத் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராக சேர்ந்தார்.

1958-அப்போதைய ஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1959- பிரதமர் அப்துல் கரீமுக்கு எதிராக நடந்த புரட்சியில் ஈடுபட்டார். அப்போது மந்திரியின் காவலாளி சுட்டதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதே ஆண்டில் சிரியா மற்றும் எகிப்துக்கு தப்பி ஓடினார்.

1960 பிப்ரவரி 25-புரட்சி நடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1962- எகிப்தில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.

1963 பிப்.8- ரமகான் புரட்சியை தொடர்ந்து ஈராக் திரும்பினார்.

1966- பாத் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார்.

1967- ஜெயிலில் இருந்து தப்பி ஓட்டம்.

1968- உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டத்துறை பட்டம் கிடைத்தது.

1979 ஜுன்- ஈராக் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

1980 செப்டம்பர் 22- ஈரானுடன் போர் தொடங்கியது.

1988- அமெரிக்க கடற்படையின் உதவியுடன் ஈரான் பிடித்த பகுதிகளை மீட்டார்.

1990 ஆகஸ்டு 2- குவைத்துக்கு எதிராக போர் தொடுத்து குவைத்தை கைப்பற்றினார்.

2003 ஏப்ரல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டது.
ஜுன் 22- சதாமின் 2 மகன்களும் (உதய்-குவாசாய்) குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

டிசம்பர்-11 பாதாள சுரங்கத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 ஜுலை 1- அவர் மீதான வழக்கில் முதல் தடவையாக பாக்தாத் கோர்ட்டில் ஆஜரானார்.

செய்தி: மாலைமலர்

No comments: