Sunday, November 05, 2006

சதாம் உசேன்

சதாம் எழுச்சியும் வீழ்ச்சியும்
நவம்பர் 05, 2006

பாக்தாத்: அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சதாம் உசேன். இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் குவைத்தை ஆக்கிரமித்தார் சதாம்.

அப்போது அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கை குண்டு மழை பொழிந்து துவம்சம் செய்தபோது, படு வீரமாக பதிலடி கொடுத்து அமெரிக்காவை கலங்கடித்தவர் சதாம்.

அப்படிப்பட்ட சதாம், ஜூனியர் புஷ்ஷின் அமெரிக்க படையினரிடம் சிக்கி தாடியும், பரிதாபமான முகமுமாக பிடிபட்டபோது உலகமே சதாமுக்காக பரிதாபப்பட்டது. சதாமின் வாழ்க்கையே ஒரு போர்க்களம்தான்.

1937, ஏப்ரல் 28: ஈராக் தலைநர் பாக்தாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித் நகருக்கு அருகே உள்ள அல் ஆவ்ஜா என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார்.

1959, அக்டோரப்ச பிரதமர் அப்தல் கரிம் கசீமை கொல்ல நடந்த முயற்சியில் சதாம் பங்கேற்றார். தோல்வி அடைந்ததால் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

1963, பிப்ரவரி: பாத் கட்சி ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. சதாம் ஈராக் திரும்பினார். ஆனால் 9 மாதங்களிலேயே பாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968, ஜூலை: ராணுவத்தில் புரட்சி செய்து பாத் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

1975, மார்ச்: புரட்சிகர கவுன்சிலிந் துணைத் தலைவராக இருந்த சதாம், ஈரான் மன்னர் ஷாவுடன் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1979, ஜூலை 16: ஈராக் அதிபராக முதல் முறையாக பதவியேற்றார்.

1980, செப்டம்பர் 22: ஈரானுடன் யுத்தத்தைத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு இது நீடித்தது.

1990, ஆகஸ்ட். 2: குவைத் மீது ஈராக் படையெடுத்து கைப்பற்றியது. ஐ.நா. பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

1991, ஜனவரி 17: அமெரிக்கா தலைமையிலான படை, ஈராக் மீது போர் தொடுத்தது.

1995, அக்டோபர் 15: ஈராக்கில் நடந்த கருத்துக் கணிப்பு மூலம் மீண்டும் அதிபர் ஆனார் சதாம்.

2002, அக்டோபர் 15: மீண்டும் அதிபராக சதாம் கருத்துக் கணிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 100 சதவீதம் பேர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

2003, மார்ச் 17: ஈராக்கை விட்டு 48 மணி நேரத்திற்குள் சதாம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெடு விதித்தார்.

மார்ச் 20: ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின. சதாம் தலைமறைவானார்.

ஏப்ரல் 4: பாக்தாத் நகர வீதிகளில் சதாம் நடமாடுவது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

ஜூலை 22: சதாமின் இரு மகன்களான குவாசி, உதய் ஆகியோர் மொசூல் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூலை 31: சதாமின் இரு மகள்கள் ராக்தாத், ரானா, அவர்களின் 9 குழந்தைகளுக்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா அடைக்கலம் கொடுத்தார்.

டிசம்பர் 13: திக்ரித் நகரிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள அட்வார் என்ற இடத்தில் பதுங்கு குழியில் தலைமறைவாக இருந்த சதாம் உசேன் பிடிபட்டார்.

அதன் பின்னர் சதாம் உசேன் மற்றும் அவரது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள், ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் என அனைவர் மீதும் தனியாக நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான சதாம் உசேன், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மட்டும் அல்லாது, அனைவரையும் தனது வீர தீர பேச்சு மற்றும் செயல்களால் கவர்ந்த சதாமின் அத்தியாயம் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது.

செய்தி : தட்ஸ்தமிழ்

No comments: