Thursday, November 16, 2006

கட்டணமில்லா தொலைபேசி

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்

சென்னை, நவ. 16: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக போனில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை எண் 1056-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் ஆகியவை தகவல் தொடர்புகளால் இணைந்த "மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள்' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்கள் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்கியோர், பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன வசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப உடனடியாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட உள்ளன.

மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்களைப் மக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல் மூன்று அல்லது நான்கு இலக்க இலவசத் தொலைபேசி எண்ணை ஒதுக்க கடந்த 27-ம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்தக் கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்று, தமிழகத்தில் நிறுவப்பட உள்ள மருத்துவக் கட்டுப்பாட்டு அவசரச் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி தொடர்பு எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.

செய்தி: தினமணி

No comments: