அரவாணிகளுக்கு சலுகை?
அரவானிகளுக்கு சலுகைகள் வழங்க தமிழக அரசு திட்டம்?
திருச்சி, நவ. 5: தமிழகத்திலுள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரவானிகளுக்குச் சலுகைத் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
முதல்கட்டமாக இலவச 2 ஏக்கர் நிலம், கலர் டிவி வழங்கும் திட்டங்களில் இவர்களை இணைக்க அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
"அரவானிகள்' (மூன்றாம் பாலினம்) அல்லது "பாலினம் மாறியவர்கள்' என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டால் மக்களிடம் சமூக அங்கீகாரம் ஏற்படுமென எதிர்பார்க்கின்றனர் அரவானி சமூக அமைப்பினர். இந்தியாவில் சில லட்சம் அரவானிகள் வாழ்ந்து வருகின்றனர். எத்தனை பேர் வசிக்கின்றனர் என்ற சரியான கணக்கு யாரிடமும் இல்லை.
சில இடங்களில் பெண் என்ற அடையாளத்திலும், சில இடங்களில் ஆண் என்ற அடையாளத்திலும் வாழ்ந்துவரும் போதிலும் பெரும்பாலான இடங்களில் எந்த அடையாளமும் இன்றித்தான் (பதிவே இன்றி) இவர்களின் வாழ்வியல் சூழல் அமைந்து விடுகின்றது. மாநிலத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் இருக்கலாம் என தொண்டு நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 14 மாவட்டங்களில் 15,000 பேருக்கு பாலியல் நோய்கள் குறித்து தொடர் கவுன்சலிங் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறது "தாய்-விஎச்எஸ்' நிறுவனம்.
அரவானிகளுக்கென ஒட்டுமொத்த அமைப்போ, இருக்கும் சிறு சிறு அமைப்புகளை ஒருங்கிணைத்த கூட்டமைப்போ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இருந்தபோதும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக அங்கீகாரம் கோரும் குரல்கள் எழுந்து வருகின்றன. மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பது என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் விவாதத்துக்கு வந்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்றாலும் அதன் தொடக்கமாக சில நலத் திட்டங்களில் அரவானிகளை இணைக்கலாம் என இச்சமூகத்தில் செயல்பட்டுவரும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அரவானிகளின் நலனைப் பாதுகாக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் அரவானிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தை, சென்ற வாரம் சென்னையில் கூட்டிப் பேச்சு நடத்தி ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையே வரும் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தேசிய அளவிலான கருத்தரங்கம் ஒன்று தில்லியில் நடைபெறுகிறது. மும்பையைச் சேர்ந்த "நேசா' என்ற நிறுவனம் நடத்தும் இக்கருத்தரங்கில் தலித் மற்றும் அரவானிகள் உரிமைகள் குறித்து நாடு முழுவதுமிருந்தும் பங்கேற்கும் பிரதிநிதிகள் விவாதிக்க உள்ளனர்.
செய்தி: தினமணி
No comments:
Post a Comment