Saturday, November 11, 2006

விஜயகாந்த் மண்டப அரசியல்

எனது கட்சியை அழிப்பதற்காக திருமண மண்டபத்தை இடிக்கிறார்கள்
விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, நவ.11-

எனது கட்சியை அழிப்பதற்காகவே, திருமண மண்டபத்தை இடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்று விஜயகாந்த் குற்றம் சுமத்தி உள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண மண்டப விவகாரம்

சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இப்போதைக்கு எனது திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்றார். பின்னர் விஜயகாந்த் மாற்று திட்டம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்றார். அப்போதே நான் இடித்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன்.

இந்த நிலையில் ஜனவரி 1-ந் தேதி எனக்கு எந்த வாழ்த்தும் அனுப்பாத டி.ஆர்.பாலு புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தை வைத்து, ஓய்வு பெற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட அமைப்பாளர் ஒருவரை கொண்டு மாற்று திட்டத்தை தயாரித்தேன்.

அதன்படி எனது திருமண மண்டபம் பகுதியில் மேம்பாலம் வரவில்லை. அந்த பகுதியில் தரைவழிப் பாதை தான் செல்கிறது.

தேர்தல்கள் முடிந்தபின்

அதனை நிராகரித்து விட்டதாக இப்போது பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் என்ன காரணம் என்று கூறவில்லை. தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களது மனது தான் ஒத்துவரவில்லை. இத்தனை மாதம் கழித்து, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் முடிந்த பின்னர் இப்போது இடிப்பதாக கூற காரணம் என்ன?

மத்திய கைலாஷ் பகுதியில் கோவிலை இடிக்காமல் கோவிலுக்கு பின்னால் பாதையை கொண்டு செல்லவில்லையா? ஏன் கோவிலை இடிக்க வேண்டியது தானே? மதுரை மற்றும் பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக கோவில்களை இடிக்கவில்லையா?

விமான நிலைய விரிவாக்கம்

உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கிறது என்று பல ஆண்டுகளாக கேட்கிறார்கள், அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மண்டபத்தை இடித்துவிட்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வீடு தரப்போகிறார்களா? வாகனங்கள் செல்லும் தரைவழிப்பாதை தானே, மாற்றி அமைத்தால் என்ன குறைந்துவிடும். கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூரில் இடம் தேவை என்ற போது எதிர்ப்பு கிளம்பியது. அங்கு குடியிருப்பவர்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் என்பது தெரியவந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். மத்திய அரசு அந்த இடத்தை கேட்கிறது. ஆனால் தமிழக அரசு அதனை கையகப்படுத்தி தரும் திட்டத்தை கைவிட்டு விட்டது.

அதே போல சென்னைக்கு வெளியே துணை நகரம் அமைக்கப்போவதாக கூறினார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் அதனை கைவிட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, தேவையில்லை என்றால் ஒன்று.

கட்சியை அழிக்க சதி

சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினோம். அதைவிட உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதனால் விஜயகாந்தை வளரவிடக் கூடாது. கட்சியையே அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு அடுத்த படியாக எனது அலுவலகத்துக்கு தான் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய மண்டபம் இருக்கிறது. எனவே நம்மைப் போலவே தே.மு.தி.க.வும் கூட்டம் நடத்துவதா என்ற எண்ணம். இந்த கட்டிட இடிப்பு விவகாரம் திட்டமிட்ட சதிச் செயல். தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருக்கலாமே?

தவறான தகவல்

மதிப்பீடு எவ்வளவு என்று கேட்டார்கள். எவ்வளவு எடுக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் தானே மதிப்பு எவ்வளவு என்று கூறமுடியும். நஷ்டஈடு அதிகப்படுத்தி கேட்டார்கள் என்று டி.ஆர்.பாலு தவறான தகவல்களை கூறியிருக்கிறார். முறையான வரைபடமும், எவ்வளவு பாகத்தை எடுக்கப் போகிறீர்கள் என்றும் தான் கேட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

மக்கள் இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றம் செல்வீர்களா?

நிருபர் கேள்வி:- அடுத்த நடவடிக்கை என்ன, நீதிமன்றத்தை நாடுவீர்களா?

பதில்:- யாரிடமும் பேசி பயனில்லை. உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றத்தை நாடினோம். என்ன நடந்துவிட்டது.

வண்டிச்சக்கரம் போன்றது

கேள்வி:- சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்புவீர்களா?

பதில்:- சட்டசபையில் பேசி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது. வங்கியில் கூட கடன் தர மறுத்ததால் என் உழைப்பு மற்றும் மற்றவர்களிடம் கடன் வாங்கி கட்டியது. நான் ஏன் இதனை இழக்க வேண்டும். மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் என அனைத்திலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்கள். காலம் வண்டிச் சக்கரம் போன்றது. சுழன்று கொண்டே இருக்கும். இப்படியே போய் விடாது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

No comments: