Wednesday, November 15, 2006

நிலச்சரிவு

பலத்த மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்
ஊட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு

7 பாலங்கள் அடித்து செல்லப்பட்டன
2 லாரிகளை வெள்ளம் இழுத்து சென்றது: ஒருவர் பலி-பலர் உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாறுகளில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஊட்டி மலைப்பாதையில் உள்ள 7 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 2 லாரிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில் ஒருவர் பலி ஆனார். 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஊட்டிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கோவை, நவ.15-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

பலத்த மழை பெய்யும் போது மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு. ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், கடந்த 1-ந் தேதி முதல் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

பயங்கர மழை

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் உள்ள இரு சாலை மார்க்கங்களில் மட்டும் ஊட்டிக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பயங்கர மழை கொட்டியது.

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள கல்லாறு அருகே உள்ள வெள்ளைப்பாலம் உள்ளிட்ட 7 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

காட்டாற்று வெள்ளம் சில இடங்களில் சாலையையும் அரித்தது.

நிலச்சரிவு

மேலும் பலத்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் கல்லாறு-நீலகிரி மாவட்டம் பர்லியார் இடையே சாலையில் 10 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஏராளமான மரங்களும் வேறோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் சாலை அப்படியே மூடி நாசமானது.

இந்த நிலச்சரிவில் 2-வது கொண்டை ஊசி வளைவு முற்றிலுமாக அழிந்தது. 10 அடி பாலம் அருகே 2 இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு துண்டானது.

பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அடித்துச் செல்லப்பட்ட லாரிகள்

திடீரென்று பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 2 லாரிகள் பள்ளத்தில் விழுந்தன.

கல்லாறு-பர்லியார் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒரு லாரி 500 அடி கிடுகிடு பள்ளத்தில் விழுந்தது. அப்போது லாரி டிரைவர் ஜாபர் தூக்கி வீசப்பட்டார். ஒரு மரக்கிளையை பிடித்தபடி உயிருக்கு போராடிய அவர் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.

பின்னர் அவரை மீட்டு தொட்டில் கட்டி வெளியே தூக்கி வந்தனர். மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிளீனர் சாவு

இந்த விபத்தில் கிளீனர் வினோத் குமார் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக செத்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

மற்றொரு லாரி வெள்ளத்தில் நாசமான இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கிக் கொண்டு இருந்தது. அதில் இருந்த 5 பேரை நேற்று அதிகாலை தீயணைப்பு படையினரும் மீட்புகுழுவினரும் மீட்டனர்.

சோதனைச் சாவடி நாசம்

பர்லியாரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி நிலச்சரிவில் சிக்கி நாசமானது. மலையில் இருந்து மண்ணுடன் உருண்டு விழுந்த பாறைகளும் கற்களும் அந்த சோதனைச் சாவடியை அமுக்கின.

பலத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு இருந்த கவிதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கண்ணையன் என்ற போலீஸ் ஏட்டும், சங்கர் என்ற போலீஸ்காரரும் வெளியே ஓடிவ ந்து உயிர் தப்பினார்கள்.

அப்போது ஏட்டு கண்ணையன் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். மரக்கிளை ஒன்றை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவரை பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அந்த சோதனைச் சாவடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மாணவர்கள் மீட்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பஸ்சில் சுற்றுலா வந்த சுமார் 19 கல்லூரி மாணவர்களும் மற்றும் வேனில் வந்த சில சுற்றுலா பயணிகளும் மலைப்பாதையில் நிலச்சரிவில் சிக்கி நடுவழியில் தவித்தனர். அவர்களை போலீசார் மீட்டு மேட்டுப்பாளையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

ஊட்டியைச் சேர்ந்த காதர்கனி என்ற வியாபாரியின் 3 மாத குழந்தை இர்பானை சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேனில் கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அந்த வேன் பர்லியார் அருகே நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்னூர் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் முரளி அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

நாசமான சாலை

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் ரோட்டில் பாறைகளும் சேறும் சகதியுமாக உள்ளது. அவற்றை `பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

பெரிய பெரிய பாறைகள் சாலையில் கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. 50 டன் எடை கொண்ட ராட்சத பாறையை துளை போட்டு உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் முழு மூச்சுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சில இடங்களுக்கு மீட்புக்குழுவினரால் இன்னும் போய்ச் சேர முடியவில்லை.

பர்லியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு, மீட்புப்பணியை முடுக்கி விட்டனர்.

போக்குவரத்து துண்டிப்பு

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே போக்கு வரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அதில் இருப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் தொட்டப்பெட்டா பிரிவு, கட்டப்பட்டு, குஞ்சப்பனை வழியாக வருகின்றன.

செய்தி: தினத்தந்தி

No comments: