வெள்ளச் செய்திகள்
கோவையில் கனமழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது - தண்ணீரில் மிதந்த 500-க்கும் மேற்பட்ட வீடுகள்
கோவை, நவ. 3: கோவையில் புதன்கிழமை இரவு பெய்த கன மழையால் ஏராளமான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
சிங்காநல்லூர், அம்மன் குளம், ராமநாதபுரம், சொக்கம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மிதந்தன.
வீடுகளில் தண்ணீர் புகுந்தது: கோவை மாநகரில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. புறநகரப் பகுதிகளான போத்தனூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களிலும் கோவையையொட்டி உள்ள ஊரகப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
மாநகரப் பகுதியில் பெய்த கன மழையால் சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, உடையாம்பாளையம், திருமகள் நகர், அம்மன் குளம், ராமநாதபுரம் கொங்கு நகர், கொண்டசாமி நாயுடு லே அவுட், உக்கடம் மஜீத் காலனி, கரும்புக்கடை மார்க்கெட், சொக்கம்புதூர், பூசாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு: உக்கடம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜி.எம்.நகர், மஜீத் காலனி, சிங்காநல்லூர் ஏரி மேடு, வெரைட்டிஹால் சாலை சி.எம்.சி. காலனி ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து குளம் போலக் காட்சி அளித்தது. இதனால் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளி அருகே சங்கனூர் ஓடையில் அடைப்பு இருந்ததால் மழை நீர் செல்ல முடியவில்லை. இதனால் அருகே உள்ள கொங்கு நகருக்குள் மழைநீரும், கழிவுநீரும் கலந்து புகுந்தது. இதனால் அப் பகுதி மக்கள் துர்நாற்றத்தால் மிகவும் சிரமப்பட்டனர். சில வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்தது.
அம்மன் குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இப் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மிதந்தன.
உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமில்லை.
அரசு மருத்துவமனையில்...: அரசு மருத்துவமனை வளாகம் சாலையைவிட தாழ்வாக இருப்பதால் சிறிய மழை பெய்தாலும் குளம்போலத் தண்ணீர் தேங்கிவிடுகிறது. புதன்கிழமை பெய்த மழையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது.
பிசியோதெரபி, எலும்பு முறிவு, பல் சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வியாழக்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியர்கள் மருத்துவமனைக்குள் தேங்கிய மழை நீரை வெளியேற்றனர்.
அதேபோல வாலாங்குளத்தையொட்டி உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளைச் சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப் பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
***
2-வது ஆண்டாக நிரம்புகிறது வைகை: இன்று வெள்ள அபாய எச்சரிக்கை?
தேனி, நவ. 3: வைகை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடந்த ஆண்டைப் போல், இந்த ஆண்டும் அணை நிரம்பி வருவதால் வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி. தற்போது நீர்மட்டம் 66 அடியாக உள்ளது. இது போன்ற தருணங்களில் வழக்கமாக முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அணை நீர்மட்டம் 65.35 அடியாக இருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 65.55 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு புதன்கிழமை விநாடிக்கு 3,913 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. வியாழக்கிழமை விநாடிக்கு 3,627 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1841 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணை வேகமாக நிரம்பி வருவதால் வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் 66 அடியைக் கடக்கும் வாய்ப்புள்ளதால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கான முன்னேற்பாடுகள் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அணையின் நீர்மட்டம் 66 அடியானதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
பெரியாறு அணை: பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வியாழக்கிழமை நீர்மட்டம் 132.10 அடியாக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
***
செய்தி: தினமணி
No comments:
Post a Comment