Sunday, November 12, 2006

வேலையற்றோர் உதவித்தொகை

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 2 லட்சம் இளைஞர்களுக்கு நிதியுதவி
தமிழகம் முழுவதும் திட்டம் தொடங்கியது

திருச்சி. நவ.12: வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருச்சியில் இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டு பூர்த்தியான இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்திருந்தது. அந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

உதவி பெறுவோரின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தத் தொகை சேர்க்கப்படும். மாநிலம் முழுவதும் 2 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக அரசு மாதம் ரூ.4 கோடி செலவிடும்.

திருச்சி நேரு விளையாட்டரங்கில் நடந்த திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

"இந்த விழாவைப் பார்க்கும்போது, அண்ணா சொன்ன பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 'சாலை ஓரத்தில் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள், அரசே, அதுதான் காலக்குறி?' என்பதுதான் அந்த பொன்மொழி.

சாலையோரத்தில் படுத்துக்கொண்டு மௌனப்புரட்சி செய்துகொண்டிருக்கும் வேலையற்றவர்கள் கொதித்து எழுந்தால் அரசு கவிழும். அந்த சுழல்காற்றில் நீங்கள் எல்லாம் சுழற்றி எறியப்படுவீர்கள் என்பதே அதன் அர்த்தம். அதை நெஞ்சில் பதிய வைத்துதான், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இவ்வாறு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வேலையில்லாத நிலை ஏற்படுமா? என்றால் அது முடியாது. இது ஆறுதல் உதவிதான். இதை உதவித்தொகை என்றோ, கருணைத்தொகை என்றோ அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது அரசின் கடமைத்தொகை.

இந்தத் தொகையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று, அரசின் திட்டங்களைப் பெற்று வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதை இங்கே குறிப்பிட்டார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஒரு ஆட்சியிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் அது வியப்புக்குரிய ஒன்றுதான்.

தமிழக அரசு போலவே மத்திய அரசும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது."

செய்தி: தினகரன்

1 comment:

TAMIL FILM TALK said...

பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
கொண்டிருக்கின்றனர்.