Friday, November 24, 2006

முல்லைப் பெரியாறு!

தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரியாறு அணையை ஆய்வு செய்யாமல் பாதியிலேயே திரும்பிய கடற்படை

பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த கொச்சி கடற்படை நிபுணர் குழுவினர்.

தேனி, நவ. 24: முல்லைப் பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற கொச்சி (கேரளம்) கடற்படை நிபுணர் குழுவுக்கு, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து, முழுமையாக ஆய்வு செய்யாமல் அந்தக் குழுவினர் பாதியிலேயே திரும்பினர்.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து, கேரள அரசு மறு பரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது. அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் நவ. 29-ம் தேதி பேச்சு நடத்த உள்ளனர்.

இந்நிலையில் கேரள அரசு திடீரென கொச்சி கடற்படை நிபுணர்கள் குழுவை அனுப்பி அணையை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து, கடற்படை கமாண்டர் கே.என். ரெட்டி தலைமையில் உதவி கமாண்டர் தினேஷ் சிங்கர் உள்பட நீர்மூழ்கி வீரர்களுடன், கடற்படை அலுவலர்கள் வியாழக்கிழமை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அணை செயற் பொறியாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோரின் கேமராவை கேரள போலீஸôர் பறித்துள்ளனர்.

அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும், காலரி பகுதியை பார்வையிடச் சென்றபோது, தமிழகப் பொறியாளர்கள் முன் அனுமதியின்றி ஆய்வு செய்யக் கூடாது எனக் கூறி காலரியை திறந்துவிட மறுத்துள்ளனர்.

இதனால் கேரள, தமிழக அலுவலர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆய்வு செய்வதை கடற்படையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி விட்டனர்.

கடற்படையினருடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் சென்றிருந்தனர்.

oOo

பெரியாறு - கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லி பேச்சு புறக்கணிப்பு: கருணாநிதி எச்சரிக்கை

சென்னை, நவ. 24: கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லியில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பேச்சில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எல்லை மீறி நடந்துகொள்கிறது. இதை பிரதமர் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தில்லியில் இம்மாதம் 29-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆராய மத்திய கப்பல் படை அலுவலர்கள் குழுவை கேரள அரசு அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கு ஒப்புக் கொண்டு விட்டு அறிக்கை விடுவது மற்றும் கப்பல்படை அலுவலர்கள் குழுவை ஆய்வு நடத்த அனுப்புவது போன்ற எல்லை மீறிய செயல்களில் கேரள அரசு ஈடுபடுவதாக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இரண்டு பக்க கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அதன் விவரம்:

கேரள அரசின் வேண்டுகோளின்படி மத்திய கடற்படை அலுவலர்கள் 17 பேர் கொண்ட குழு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட வியாழக்கிழமை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசுக்குச் சொந்தமானதும், தமிழக அரசின் பராமரிப்பில் இருப்பதுமாகும். தமிழக அரசின் எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையாக கேரள அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில், தேக்கி வைத்துக் கொள்ள அனுமதியளித்து கடந்த பிப்.27-ம் தேதி உத்தரவிட்ட பிறகும், இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டிருப்பது முறையானதல்ல.

இரு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, நாளும் குறிக்கப்பட்ட நிலையில், கேரள அரசின் இத்தகைய அத்துமீறிய செயல் தேவையற்றதும், இரு மாநிலங்களின் சுமுக உறவுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும்.

தொடர்ந்து இத்தகைய தவறான வகையில் மற்றும் தமிழக மக்களிடையே மனக் கொந்தளிப்பை அதிகமாக்கிடும் வகையில் கேரள அரசின் நடவடிக்கைகள் இருக்குமானால், இம்மாதம் 29-ம் தேதி தில்லியில் நடைபெறவிருக்கும் பேச்சில் தமிழக அரசு கலந்துகொள்ள இயலாமல் போகக் கூடும் என்பதுடன் நடைபெற்ற சம்பவங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிவாரணம் தேட வேண்டி வரும். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரள அரசினுடைய சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

oOo

கருணாநிதியின் கருத்து ஆத்திரமூட்டுவதாகும்: கேரள முதல்வர் பதில்

திருவனந்தபுரம், நவ. 24:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக 29 ம் தேதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையிலிருந்து விலக நேரும் என தமிழக முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆத்திரமூட்டுவதாகும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

பெரியாறு அணையை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்வதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கு தெரியும். கேரளத்துக்கு சொந்தமான நிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அணையின் பாதுகாப்பை மதிப்பிட தமிழகத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்ய்திகள் : தினமணி

No comments: