Thursday, November 02, 2006

திமுக-பாமக சமரசம்

சமரசம்? * தி.மு.க., பா.ம.க., மோதலில் திடீர் உடன்பாடு * பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள முடிவு

நமது சிறப்பு நிருபர் (தினமலர்)

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக தி.மு.க., பா.ம.க., இடையே நடந்து வந்த மோதலில் திடீரென்று சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. "எந்தப் பிரச்னைகளாக இருந்தாலும் அவற்றை பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என்று இரு தரப்பிலும் முடிவெடுத்துள்ளதால், கடந்த ஒரு சில தினங்களாக நடந்து வந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீட்டை சுமுகமாக முடித்த தி.மு.க., தலைமை, தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும் சோதனையை சந்தித்து வருகிறது. தேர்தலில் மாநிலம் முழுவதும் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. எனினும், இதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பல இடங்களில் தோல்வியடைந்தன. இதற்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தான் காரணம் என்று அக்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின. பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் தி.மு.க.,வினர் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி வெற்றி பெற்றனர். இதற்கு கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தி.மு.க., பா.ம.க., இடையே பெரும் புகைச்சல் இருந்து வந்தது. நகராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளில் பா.ம.க., வேட்பாளர்கள் தோற்றதற்கு தி.மு.க., தான் காரணம் என்று அக்கட்சி தலைவர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தமிழக அளவில் பா.ம.க., வேட்பாளர்கள் 50 சதவீதம் தோற்றதற்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., தான் காரணம்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பா.ம.க., குற்றச்சாட்டுக்கு தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதி உடனடியாக மறுப்பு தெரிவித்தார். "தி.மு.க., எந்தவித துரோகமும் செய்யவில்லை. தேர்தலில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தவறுகள் நடந்திருக்கலாம். அந்த தவறை செய்த தி.மு.க.,வினர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார்.

இதனிடையே கடந்த 30ம் தேதி திடீரென்று நிருபர்களைச் சந்தித்த பா.ம.க., தலைவர் ராமதாஸ், தி.மு.க.,விற்கு எதிராக அடுக்கடுக்காக கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். "கூட்டணி தர்மத்தை தி.மு.க., மீறிவிட்டது. பா.ம.க.,வுக்கு பச்சைத் துரோகம் செய்துவிட்டது' என்றும் பொரிந்து தள்ளினார். இனி எதிர்க்கட்சியாக செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.

பா.ம.க.,வின் இந்த அதிரடியால் தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பா.ம.க.,வினர் மாநிலம் முழுவதும் தி.மு.க.,வுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் கடுமையான அறிக்கை போர் நடந்து வந்தது. இதனிடையே, "தேர்தலில் தவறு செய்த தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. தேன் கூட்டை கலைக்கும் வேலை வேண்டாம்' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி எச்சரிக்கை விடுத்தார்.

பா.ம.க., வெற்றி பெற வேண்டிய இடங்களில் பல இடங்களில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியிருக்கிறது. அந்த இடங்களில் பதவியேற்றுள்ள தி.மு.க.,வினர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்டுள்ள பா.ம.க.,வினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதும் பா.ம.க.,வின் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது.

ஆனால், நேற்று முன்தினம் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நடந்த பிரச்னைகளை மீண்டும் கிளற வேண்டாம். அந்த பிரச்னைகளை விட்டுவிட்டு கட்சியினர் அனைவரும் அவரவர் வேலையைப் பாருங்கள்' என்று அதில் தெரிவித்திருந்தார். மணி இப்படி "அடக்கி வாசித்ததை' அரசியல் ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்தனர்.

இந்நிலையில், தமிழக மாநிலம் உருவாகி 50வது ஆண்டு விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கான அழைப்பிதழில் தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இவ்விழாவில் ராமதாஸ் கலந்து கொள்ளாவிட்டால் இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பிற்கிடையே ராமதாஸ் கலந்து கொண்டார். இதன் மூலம் ஒரு சில தினங்களாக இரு கட்சிகளுக்கிடையே நடந்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

"எந்தப் பிரச்னைகளாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு பிரச்னை வேண்டாம்' என்று இரு தரப்பிலும் கடைசி நேரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ம.க., வெற்றி பெறக்கூடிய எந்தெந்த பதவிகளில் தோல்வி அடைந்தார்களோ அந்த பதவிகளை பா.ம.க.,விற்கு திருப்பித் தருவதற்கு தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தி: தினமலர்

No comments: