கட்டிடங்கள் இடிக்கப்படுகிறது
சென்னை நகரில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட
27 கட்டிடங்கள் இடிக்கப்படும்
சென்னை, நவ.3-
சென்னை நகரில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 27 கட்டிடங்களை இடிக்க சி.எம்.டி.ஏ. நோட்டீசு அனுப்பியுள்ளது.
அனுமதியில்லாத கட்டிடங்கள்
சென்னை நகரில் பல பகுதிகளில் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 3 மாடி கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு 7 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன.
சமீபத்தில் இதுபோன்று கட்டப்பட்ட சில கட்டிடங்களை சி.எம்.டி.ஏ. இடித்து தள்ளியது. மேலும் இதுபோல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி 27 கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
தியாகராய நகர்
அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அனுமதிக்கு ஏற்ப தாங்களே இடித்துவிடும்படி 30 நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர்களே கட்டிடங்களை இடிக்காவிட்டால், சி.எம்.டி.ஏ. அந்த கட்டிடங்களை இடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.
தியாகராய நகர், மைலாப்பூர், எழும்பூர், அண்ணாசாலை, அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வேப்பேரி, வடபழனி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள 27 கட்டிட உரிமையாளர்களுக்கு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள்
இதுகுறித்து சி.எம்.டி.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கீழே விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள கட்டிடங்கள் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமலும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், கட்டிட அபிவிருத்தி செய்பவர்கள், கட்டிடத்தில் குடியிருப்போர் இந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது கட்டிடங்களை பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு ஏற்ப கொண்டு வரவேண்டும். அல்லது திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தங்களது மனையை கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு தாங்களே கொண்டு வரவேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் சட்டப்படி மறு அறிவிப்பின்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்.
கட்டிடங்கள் விவரம்
தியாகராயநகர் ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் (3-வது தளம் முதல் 7-வது தளம் வரை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது), நியூ சரவணா ஸ்டோர்ஸ் (கார் நிறுத்தும் தளம் வணிக உபயோகமாக மாற்றப்பட்டுள்ளது, மற்றும் சில பகுதிகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது), ஜி.ஆர்.டி. தங்க சேமிப்பு பிரிவு, போத்தீஸ், சரவணா கோல்டு ஹவுஸ், சரவணா செல்வரத்தினம், ஜி.ஆர்.டி. தங்க மாளிகை, டி.சி.எஸ். டெக்ஸ்டைல்ஸ், அண்ணாசாலை அசோசியேட்டட் பில்டர்ஸ், அண்ணாநகர் பிரமீட் ஆடியோ இந்தியா, வடபழனி ஏ.வி.எம். வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம், கோடம்பாக்கம் சேகர் எம்போரியம் உள்பட 27 கட்டிடங்கள்.
இவ்வாறு சி.எம்.டி.ஏ.வின் எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினத்தந்தி
No comments:
Post a Comment