ஆதரவு x எதிர்ப்பு
சதாமுக்கு மரண தண்டனை: அரபு மக்களின் வரவேற்பும், எதிர்ப்பும்
பேரூத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதை அரபு மக்களில் சிலர் வரவேற்றுள்ளனர். வேறு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுக் குவித்த சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சரியானதுதான் என்று சிலர் கூறினர். ஆனால் வேறு சிலரோ, இந்த தீர்ப்பு நியாயமற்றது. அமெரிக்கா திட்டமிட்டு சதாம் உசேனை பழிவாங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.
சதாம் உசேனுக்கு அமெரிக்க ஆதரவிலான நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இதன் பின்னணி என்னவெனில் அமெரிக்க படைகள் இன்னும் சில காலம் இராக்கில் தங்கியிருக்கும் என்பதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சதாமுக்கு தண்டனை ஏதும் வழங்காமலோ அல்லது தண்டனையைக் குறைத்தாலோ, அமெரிக்கா கலகப்படையினருக்கு பயந்துவிட்டது என்ற பேச்சு எழுந்திருக்கும். இப்போது அதற்கு வழியில்லை என்று தாவூத் அல் ஷிரியன் என்ற சவூதி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் சதாம் உசேனுக்கு சுதந்திரமாக ஆட்சி செய்ய உரிமை உள்ளது என்று சிலர் கருத்து கூறியுள்ளனர். சதாம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இராக்கில் வன்முறை அதிகரித்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மரண தண்டனை பெறும் அளவுக்கு சதாம் குற்றவாளி என்றால், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஒருவகையில் குற்றவாளிதான். லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பிரதமர் எஹுத் உல்மர்ட்டும் குற்றவாளிதான். அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அம்மானில் நகைக் கடை வைத்திருக்கும் இப்ராகிம் ஹரிஷ் தெரிவித்தார்.
சதாமுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என்று சதாம் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த ஜியாத் அல் காஸôவெனி தெரிவித்தார்.
சதாமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கைதான் என்று ஸன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இராக்கியரும், ஜோர்டானில் தொழில்நடத்தி வருபவருமான சலா ஹஸ்ஸன்.
ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஜாஸிம் அலி, இதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார். இவரும் ஜோர்டானில்தான் இருக்கிறார்.
சதாமுக்கு மரண தண்டனை வழங்கியது மிகக் கொடுமையானது. இராக்கில் இப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களை தூக்கில் போடுவதுதான் நியாயமானது. ஏனெனில் அவர்கள்தான் அமெரிக்காவின் கைக்கூலியாக இருப்பவர்கள் என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ஜாஸிம் அலி.
இந்நிலையில் குவைத் மக்கள் சிலர், சதாமுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதுதான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எப்போதோ மரண தண்டனை அளித்திருக்க வேண்டும்; காலதாமதமாக அறிவிக்கப்பட்டபோதிலும் இது வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்துள்ளனர். (1990-ல் சதாம் குவைத் மீது படையெடுத்தது நினைவிருக்கும்.)
சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்ற அரபு தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அரபு நாட்டு வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் மீது வழக்கு நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார் குவைத்தைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல் ரிதா அஸ்ஸீரி.
சதாமுக்கு மரணதண்டனை வழங்காமல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்க வேண்டும். ஏராளமான உயிர்களை பலிவாங்கிய அவர், சிறையில் அவரை குற்ற உணர்ச்சியால் அணுஅணுவாக சாகடித்திருக்க வேண்டும் என்கிறார் குவைத்தைச் சேர்ந்த கோலோத் அல்-பீலி என்ற பெண்மணி.
செய்தி: தினமணி
No comments:
Post a Comment