வல்லிக்கண்ணன்
பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன்
திருநெல்வேலி, நவ. 11: சிறுகதை, நாவல், திறனாய்வு என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இறுதிமூச்சு வரை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். இலக்கியத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றால், மணவாழ்க்கையை மறுத்து, எளிமையாக வாழ்ந்தவர்.
சிறுகதைகளின் உச்சத்தை தொட்ட நெல்லைச் சீமையின் அழியாப் புகழ் பெற்ற இலக்கியகர்த்தா. புதுமைப்பித்தனின் சம காலத்தவர்.
திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதல் இலக்கிய தாகம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக, தனது பெயரைக்கூட ஊரின் பெயரை நினைவுகூரும் வகையில் வல்லிக்கண்ணன் என மாற்றிக் கொண்டார்.
தமக்கிருந்த இலக்கிய தாகத்துக்கு வடிகால் தேடவும், அதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் ஆர்வத்துடனும் தான் பார்த்து வந்த அரசு வேலையை உதறிவிட்டு நடந்தே சென்னை சென்றார். அங்கு "காந்தி', "கிராம ஊழியன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி செய்தார்.
புதுமைப்பித்தனுடன் தொடர்பு வைத்திருந்த வல்லிக்கண்ணன், பல குறு நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
குடும்பச் சூழலில் இருந்து விலகி இருந்த இவர், அவரது சகோதரர் இறந்த பிறகு அந்தக் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர் எழுதிய ""புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' என்ற திறனாய்வு நூலுக்கு 1978-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வல்லிக்கண்ணன். இதே ஊரைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளை முதல் விருதைப் பெற்றவர் ஆவார்.
தாமிரபரணி பிரியர்: சென்னையில் வசித்து வந்த வல்லிக்கண்ணன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த உடன் பஸ் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து நேராக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.
செய்தி : தினமணி
No comments:
Post a Comment